முதல் பாகத்தில் குமரேசனால் (சூரி) பிடிக்கப்பட்ட வாத்தியார் பெருமாள் (விஜய் சேதுபதி) விசாரணைக்கு அழைத்து வரப்படுவதில் ஆரம்பிக்கிறது படம். பெருமாளின் கைதுக்கு நடுவே நடந்த கலாட்டாக்களும், அதில் பறி போன மக்களின் உயிர்களுக்கு பதில் சொல்வது ஒருபுறம், பெருமாளை என்ன செய்வது என்ற மாஸ்டர் பிளான் இன்னொரு புறம் என தலைமை செயலாளர் சுப்ரமணியன் (ராஜீவ் மேனன்) தனது குழுவுடன் திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார். இதே வேளையில் பெருமாளை இடம் மாற்றும் பணிக்காக காட்டுக்குள் செல்கிறது ராகவேந்தர் (சேத்தன்) தலைமையிலான குழு. கூடவே பெருமாளை மீட்க கிளம்புகிறது மக்கள் படை. இத்தனை களேபரங்களுக்கு நடுவே வாத்தியார் தன் பக்க உண்மைகளையும், அவர் எந்த அநீதிகளைக் கண்டு கொதித்து, இப் பாதைக்கு வந்தார் என்பதை சொல்ல ஆரம்பிக்கிறார். இந்தப் பயணத்தில், உரையாடலில் கிடைக்கும் கேள்விகள், பதில்கள், தத்துவங்கள், எது சரி? தவறு? என்ற அறம் சார்ந்த தடுமாற்றங்களை விளக்குகிறது படம்.
இந்தப் படத்தின் ஆகப்பெரிய பலம், இந்தப் படம் முன்வைக்கும் அரசியல். வரலாற்றில் பதிந்த பதியப்படாத யாரையும் குறிப்பிடவில்லை என்ற வெற்றியின் குரலில் ஒலிக்கும் டிஸ்க்ளைமரே படத்தின் பெரிய ஸ்டேட்மென்ட் தான். காரணம், விடுதலை 2ன் நோக்கமே அவர்களை மக்கள் முன் நிறுவுவதுதான். பண்ணையார், மிராசுதார், முதலாளிகள், போலீஸ், அரசியல்வாதி, அதிகார அமைப்பு என காலம் காலமாக மக்களை நசுக்கும் செயல் எப்படி வடிவம் மாறிக் கொண்டே இருக்கிறது என்பதும், அப்போதெல்லாம் அதை எதிர்த்து போராட தத்துவத்தை ஆயுதமாக எடுத்து பெரிய கூட்டமே கிளம்பும் என்பதையும் படம் அழுத்தமாக சொல்கிறது. அதே போல் வன்முறையால் தற்காலிக தீர்வை மட்டும் தர முடியும் என்பதையும், நாட்பட்ட காயத்துக்கான மருந்து ஒருநாளும் வன்முறையாக இருக்காது என்பதையும் நிறுவ முயல்கிறார்.
விடுதலை முதல் பாகம் முழுக்க மிக கோரமான, பார்க்கவே சில்லிட வைக்கிற சம்பவங்களை காட்டிய வெற்றிமாறன், இந்த முறை அதை எதிர்த்தவனின் கதையையும், அதற்கான காரணங்களையும் முன் வைக்கிறார். அதில் எந்த ஒரு கருத்தும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப் பட கூடாது என்பதிலும் மிக்க கவனமாக இருந்திருக்கிறார். வன்முறைதான் தீர்வு என முடிவு செய்யும் பெருமாள், பல இழப்புகளுக்குப் பின் வன்முறையைக் கைவிடுவதும், ஒடுக்கப்பட்ட ஒருவர் அதிகாரத்துக்கு வந்ததையும், என்னவாவது செய்து என் மரியாதையை சம்பாதித்துக் கொள்வேன் எனச் சொல்பவனை எதிர்த்து பேசுவதும் எனப் பல இடங்களில் இதை பார்க்க முடிந்தது. வரலாற்றில் பதியப்படக் கூடாது என மறைக்கப்பட்ட பல சம்பவங்கள் மற்றும் போராளிகளை ஒரு படத்தின் மூலம் மக்களுக்கு கொண்டு சென்றதும் வெற்றிமாறனின் சாதனை.
விஜய் சேதுபதிதான் இந்தப் படத்தின் மையம் என்பதால், படத்தை பயங்கரமாக தாங்கியிருக்கிறார். எதுவும் தெரியாத வாத்தியாராக, ஒரு இழப்புக்கு பின் போராளியாக ஆயுதம் ஏந்துவது, பின்பு ஆயுதத்தை கைவிடுவது எனப் பல பரிணாமங்கள். சூரி இதில் ஒரு குணச்சித்திர பாத்திரம் என்றாலும், மிக இயல்பாக நடித்திருக்கிறார். அதிலும் அவர் "யார சார் சுடணும்? எதுக்கு சார் சுடணும்?" எனக் கேட்கும் இடமெல்லாம் பிரமாதம். இந்தப் படத்திலேயே மிக அதிகமாக கவர்வது தலைமை செயளாலராக நடித்திருக்கும் ராஜீவ் மேனன் தான். நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்படுவது, பின்பு நிதானமாக என்ன செய்யலாம் எனத் திட்டமிடுவது என அதிகார மையத்தை சிக்கலில்லாமல் ஓடச் செய்யக்கூடிய ஒரு பற்சக்கரம் போல, வெறுமனே லாப நோக்கத்தோடு செயல்படும் பல ஆயிரம் அதிகாரிகளின் கூட்டு முகமாக தெரிகிறார். சில காட்சிகளிலேயே வரும் சரவண சுப்பையா, இளவரசு, தமிழரசன், கிஷோர், கென் கருணாஸ், போஸ் வெங்கட் என பல நடிகர்கள் கச்சிதம். மஞ்சு வாரியர் நடிப்பு ஈர்த்தாலும், அவரது கதாப்பாத்திரம் மிக செயற்கையாக துருத்திக் கொண்டிருப்பது மைனஸ்.
படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இப்படத்தை உருவாக்கியிருக்கும் விதத்தை தான் சொல்லவேண்டும். இந்தப் படத்தை ஒரு அரசியல் தெளிவுள்ள படமாக கொடுக்க எடுத்துக் கொண்ட கவனத்தை, பட உருவாக்கத்திலும் எடுத்திருக்கலாம். சென்ற பாகத்தில் போலீசாக வந்த வேல்ராஜ், இந்த பாகத்தில் ஜமீனாக வருவதற்கு என்ன காரணம் சொன்னாலும், பளீரென தெரியும் குறை அது. (தசாவதாரம் கமல் போல் வேல்ராஜை வைத்து வெற்றி எதுவும் பிளான் செய்தாரா என தெரியவில்லை). அந்த அளவு படத்தின் உருவாக்கத்தில் குறைகள் ஏராளம். வாய்ஸ் ஓவரிலும், எடிட்டிங்கிலும் படத்தின் கதையை யோசிப்பதன் விளைவாக, படத்தின் திரைக்கதை ஏகத்துக்கும் குழப்புகிறது. அதிலும் இப்பிடித்தான் அன்னைக்கு என்ன ஆச்சுன்னா என வாத்தியார் எடுக்கும் ஒவ்வொரு பிளாஷ்பேக் லீடும் அநியாயம். குறிப்பாக க்ளைமாக்ஸ் ஷூட் அவுட் காட்சியின் போது வாத்தியார் தனது சொற்பொழிவை தொடர்வது எல்லாம், மிக சலிப்பை ஏற்படுத்துகிறது.
விடுதலை பாகம் ஒன்று படத்தில் முருகேசன் கதைக்குள் வரும் போது, அவர் மலை மேல் ஏறி செல்வார், விடுதலை 2 முடியும் போது முருகேசன் மலையில் இருந்து இறங்குவதோடு முடிகிறது. இது எப்படி குமரேசனின் பயணமோ, அதே போல பெருமாள் வாத்தியாரின் பயணமும் கூட. வன்முறைதான் பாதை எனது தீர்மானிக்கும் ஒருவன், தத்துவம் தான் ஆயுதம் எனப் புரிந்து கொள்ளும் பயணமே விடுதலை 2 என சொல்லலாம். அந்த விதத்தில் தன்னுடைய வாதத்தை மிக அழுத்தமாக முன் வைக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
இளையராஜாவின் வயது 81. இந்தப் படத்தின் பின்னணி இசையில் ராஜாவின் மந்திர விரல்கள் மீண்டும் மாயாஜாலங்கள் புரிந்திருக்கின்றன. காட்டுமல்லியை ஒட்டியே வரும் தினம் தினமும் நல்லதொரு ரீங்கார மெலடி.
இங்கு நாம் செய்தித் தாள்களில் படிக்கும் தீவிரவாத செயல்களில், எத்தனை நிஜமானவை, எத்தனை ஜோடிக்கப்பட்டவை என்பதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் நீதிமன்றங்களிலும் சிறைகளிலும் மௌன சாட்சியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றன. இந்திய சிறைகளில் மூன்றில் இருவர் விசாரணைக் கைதிகள் என்கிறது Prison Survey of India 2017 ஆய்வு. அமெரிக்கர்களுக்கு கறுப்பினத்தவர்கள், இந்தியாவில் சிறுபான்மையினர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள். நிலப்பரப்புகள்தான் மாறுகின்றதே ஒழிய, அதிகார வர்க்கங்கள் ஒருபோதும் அதன் நீட்டிக்கொண்டிருக்கும் நகத்தைகூட வெட்ட யோசித்தது இல்லை. அது கேட்பதெல்லாம் காணிக்கையாக கூக்குரல் எழுப்பவர்களின் விரல்களைத்தான் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் வெற்றி.
வெற்றியின் திரைமொழி அபாரமானது. ஆனால், சமீப படங்களில் அடர்த்தியான வசனங்களையும், அதற்கேற்ற காட்சிகளையும் மட்டுமே வைத்து திரைக்கதையை டப்பிங் செய்யும் போது உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இது அவருக்கு நிச்சயம் அழகல்ல.
வரலாற்றில் பதியப்படாத மனிதர்களை இக்கால இளைஞர்களிடம் கொண்டு சேர்த்ததற்கு வெற்றியை மனதார பாராட்டலாம்.