வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படம் 'அரசன்'. இது வடசென்னை உலகத்தில் நிகழும் கதை என்பதும், படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்பதும் கூடுதல் சர்ப்ரைஸ். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் கோவில்பட்டியில் துவங்கியது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. ஆனால் இரு வாரங்களுக்கு முன்பு சிம்பு - ஐசரி கணேஷ் இடையேயான பணப் பிரச்னை காரணமாக இப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் ஐசரி - சிம்பு தரப்பிலான கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் பேசி தீர்க்கப்பட்டு சுமுகம் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் கடைசி வாரத்தில் சென்னையில் மீண்டும் துவங்கும் எனச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு கோவில்பட்டியில் பெரிய ஷெட்யூல் ஒன்றையும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இப்போது ’அரசன்’ படப்பிடிப்பைத் துவங்குவதற்கு இடையே உள்ள கேப்பில் அரசனுக்குப் போடப்பட்ட செட்டில், அமீர், கிஷோர், கென் நடிப்பில் `ராஜன் வகையறா' படத்தின் படப்பிடிப்புகளை எடுத்து வருகிறார் எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.
முதலில் வெப் சீரிஸாக இதனை எடுப்பதாக சொல்லி இருந்த வெற்றிமாறன் இப்போது படமாக எடுக்கிறாரா, சீரிஸா என்பது பற்றிய தகவல் எதுவும் இல்லை. ஆனால் இவை எல்லாமே வட சென்னை உலகில் நடக்கும் கதை என்பது மட்டும் உறுதி. இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் `வட சென்னை 2' படமும் விரைவில் உருவாகும் என பல இடங்களில் தனுஷ் - வெற்றிமாறன் பல இடங்களில் தெரிவித்துள்ளனர்.