Kavin Mask
கோலிவுட் செய்திகள்

"நீங்க தனுஷ் சார், நான் உங்க கையில இருக்குற சேவலா.." - வெற்றிமாறனிடம் கவின் கலகல | MASK

பத்து நிமிட சந்திப்பாக இருக்கும் என நினைத்தால், 30 நிமிடம் வெற்றி சாரே கதை சொன்னார். அதன் பின்பு 1 மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

Johnson

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் இயக்கியுள்ள படம் `மாஸ்க்'. இப்படம் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் கவின் பேசும் போது "நான் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை நம்புவேன். அன்றைய நாள் நல்ல படியாக செல்ல வேண்டும், அன்றைய நாள் வேலைகள் நல்லபடியாக முடிய வேண்டும். அந்த குட்டி குட்டி விஷயங்கள் நம்மை போக வேண்டிய இடத்துக்கு கூட்டி செல்லும். இந்த நாளுக்கு நான் ரொம்ப நன்றியுடன் இருப்பேன். ஏனென்றால் இந்த நிகழ்வில் பேசி பலரையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறார்கள். இவ்வளவு சந்தோஷமான ஒரு இசை வெளியீட்டு விழாவை பார்த்ததில்லை.

Vijay Sethupathi

சேது அண்ணன் வந்ததற்கு ரொம்ப நன்றி. பீட்சா படத்தில்தான் என்னுடைய முகம் முதல் முதலாக திரையில் வந்தது. ஒன்னுமே இல்லாத ஆளாக இருந்தாலும் நாம் உண்மையாக வேலை செய்தால் நாம் ஆசைபட்டது நமக்கு நடக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்த பல பேரில் சேது அண்ணாவும் ஒருவர். அந்த நம்பிக்கையை அன்று விதைத்த சேது அண்ணாவுக்கு நன்றி.

வெற்றி சாரிடம் இருந்துதான் இந்த படம் ஆரம்பித்தது. அவரது அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. அலுவலகம் அழைத்தார்கள். ஒரு பத்து நிமிட சந்திப்பாக இருக்கும் என நினைத்தால், 30 நிமிடம் வெற்றி சாரே கதை சொன்னார். அதன் பின்பு 1 மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் அந்த கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கைதான் நான் வைத்த நம்பிக்கை. அவரிடம், ‘உங்களை நம்பிதான் உள்ளே வருகிறேன், நீங்கள் பாத்துக் கொள்ளுங்கள் சார்’என சொன்னேன். இன்று வரை பார்த்துக் கொள்கிறீர்கள் சார். நன்றி.

Vetrimaaran

முதல் மீட்டிங்கில் ஒரு பெரிய ஆளிடம் போகும் உணர்வே இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல் ரொம்ப ஜாலி ஆகி விட்டது. சும்மா கால் செய்து பேசும் அளவு நட்பு வளர்ந்தது. சார் ஷூட்டுக்கு வாங்க போர் அடிக்கு’ என சொல்வேன். அவர் என்னை ஃப்ரெண்டாக நினைத்தாரா இல்லையா என தெரியவில்லை. ஆனால் நான் அவரை ஃப்ரெண்டாக நம்பிவிட்டேன். இந்த பஸ் நின்ற பிறகு திரும்ப ஏற முடியுமா என தெரியாது. அதனால்  ஜன்னலில் காற்று அடிக்கும் வரை காற்றை முழுவதாக வாங்கிக் கொள்ள வேண்டியது தான் என சந்தோஷமாக இருந்தேன். படம் ரிலீஸ் ஆகப்போகிறது என சந்தோஷமாக இருந்தாலும் இந்த பயணம் முடிவது ஒரு பக்கம் வருத்தமாக இருக்கிறது.

ஒருநாள் வெற்றி சார் கொஞ்சம் டவுனாக இருந்தார். அப்போது, ‘நானும் சொக்குவும் ஒரே நேரத்துலதான் சினிமாக்கு வந்தோம். நான் அசிஸ்டண்ட் டிரைக்டரா சேர்ந்தபோது சொக்கு அசிஸ்டண்ட் மேனேஜரா ஆனாரு. இப்ப அவர் தயாரிப்பாளரா முதல் படம் பண்ணுறாரு. நல்லபடியா இந்த படம் சரியா போகணும்னு’ என சொன்னார். நான், ‘என்ன சார், சிச்சுவேஷன் ஆடுகளம் இன்டெர்வல் பிளாக் மாதிரி இருக்கு, நீங்க தனுஷ் சார், நான் உங்க கையில இருக்குற சேவலா சார்’ எனக் கூறினேன். கண்டிப்பா பந்தையம் அடிச்சுடும்னு நம்புறேன் சார்.

Andrea Jeremiah

ஆண்ட்ரியா மேடமும் அப்படிதான். அவர் கதை கேட்ட பிறகு தான் சாருக்கு அனுப்பி இருக்கிறார். அவர் ஒரு கதை கேட்டு ஓக்கே செய்திருக்கிறார் என்றால் அது பெரிய விஷயம். `மனுஷி' படமும் `பிசாசு 2'வும் நான் பார்க்கவில்லை. அதில பயங்கரமா நடித்திருக்கிறீர்கள் என கேள்விப்பட்டேன். இந்த படத்துக்குப் பிறகு அது எல்லாம் கூடிவரும் என நம்புகிறேன். எங்க அண்ணனிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான். தயாரிப்பாளர் காசு திரும்ப கிடைக்க வேண்டும். அப்படி உங்களுக்கும் சொக்கு அண்ணனுக்கும் பணம் கிடைக்க வேண்டும்.

டைரக்டர் விக்கர்னன் நிறைய பேசுவார் என தெரியும். இன்னைக்கு சரியாக பேசிவிட்டார். படம் நல்ல படியாக போக வேண்டும், இன்னொரு பெரிய ஹீரோ உங்களுக்கு கால் பண்ண வேண்டும். பெரிய இடத்துக்கு  போகணும். இதெல்லாம் நடக்கும்னு என நான் நம்புகிறேன்.

ஒரு வேலை பாக்குற என்னிடமே டைம் மேனேஜ்மென்ட் பற்றி கேட்கிறார்கள், ஜிவி சார் பாடுகிறார், மியூசிக் போடுகிறார், நடிக்கிறார், கான்சர்ட் செய்கிறார்… தூங்க டைம் இருக்கிறதா சார்… உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் சார். நமக்கு சின்ன சின்ன ஆசை லிஸ்ட் இருக்கும். அந்த மாதிரி என் லிஸ்டில் ஜிவி சார் மியூசிகில் நான் வரணும். இப்போது அதை டிக் செய்துவிடுவேன். உங்களுக்கு ஹிட் மிஷின் என ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள், அந்த மிஷின் இந்த படத்தை தள்ளிடும் என நம்புகிறேன். அமரன் ஒரு ஜானரில் இருக்கும், பராசக்தி சிங்கிள் ஒரு ஜானர், குட் பேட் அக்லி ஒரு ஜானர். இப்படி ஒரு ஒரு ஜானரிலிருந்து இந்த படத்துக்கு ஒரு பாடல் கிடைத்திருக்கிறது. படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இந்த ஆல்பம் மக்களை அதிகமாக  போய் சேரும் என நம்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல் வெற்றி வீரனே. இது ஹீரோ வில்லன் என்பதை தாண்டி, உண்மையாக உழைக்கும் ஒவ்வொரு சாமானியனுக்கான பாடலாக இருக்கும் என நம்புகிறேன்.

Nelson Dilipkumar

சமீபத்தில் கிஸ் பட புரமோஷன் சமயத்தில் என்னை தடுத்து நிறுத்துங்க ஜி என சதீஷ் சொன்னது வைரல் ஆனது. அப்படி வாழ்க்கையில் முக்கியமான நேரத்தில் என்னை தடுத்து நிறுத்தி, சரியான பாதைக்கு மாற்றினார் நெல்சன் அண்ணன். நான் கேட்டாலும் கேட்கவில்லை என்றாலும் என் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார். இது எத்தனை பேருக்கு அமையும் என தெரியவில்லை. எல்லாத்துக்கும் நன்றி அண்ணா" என்றார்.