வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் `வடசென்னை'. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், அமீர், டேனியல் பாலாஜி, பவன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் எனப் பலரும் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் நடிகர் கிஷோர் அளித்த பேட்டி ஒன்றில் வடசென்னை பற்றியும் வெற்றிமாறன் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்பேட்டியில் கிஷோர் "வெற்றிக்கு எனது வரம்புகளும், அவற்றைச் சுற்றி எப்படி வேலை செய்வது என்பதும் தெரியும். மேலும், வெற்றியின் படங்கள் 'மனித' கதாபாத்திரங்களால் நிறைந்துள்ளன. அத்தகைய கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகள் மட்டுமே உங்களை இயல்பான நடிப்பை வழங்கத் தூண்டும்" என்றவர், வெற்றிமாறனின் `அரசன்' படத்தில் இருக்கிறாரா? எனக் கேட்கப்பட்ட போது "வெற்றியின் தலையில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. தனது படத்தின் தயாரிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கூட புதிய யோசனைகளுடன் சுற்றும் ஒரு இயக்குநர் அவர். அப்படித்தான் வடசென்னை ஆறு மணி நேரத்திற்கும் மேலான காட்சிகளை கொண்டிருந்தது. அரசனில் செந்திலாக மீண்டும் நடிக்க ஆசைதான். வெற்றியின் அழைப்புக்காக நான் காத்திருக்கிறேன்" என்றார்.
அதனைத் தொடர்ந்து வடசென்னையில் அவர் பணியாற்றியது பற்றி பேசும் போது "ஆரம்பத்தில், நான் ராஜனாகவும், பின்னர் குணாவாகவும் நடிக்கவிருந்தேன், பின்னர்தான் செந்திலாக நடிப்பது இறுதியானது. நான் சொன்னது போல, வெற்றிக்கு எப்போதும் யோசனைகள் வந்து கொண்டே இருக்கும். முன்பு இந்தக் கதை ராஜன் இடத்திற்கு, அன்பு செல்வது போல இல்லை. நான் படத்தைப் பார்த்தபோது, எனக்கு ஆர்வத்தை தூண்டிய பல பகுதிகள் இல்லாதது குறித்து அதிருப்தி அடைந்தேன். வெப் சீரிஸ்கள் இங்கு வழக்கமாகும் முன்பே, வட சென்னையை ஒரு சீரிஸாக அவர் கற்பனை செய்தார்.எனவே இந்த நேர்காணலின் மூலம், மீதமுள்ள காட்சிகளை அவர் எந்த வடிவத்தில் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறாரோ, அப்படி மாற்றி விரைவில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.