அனிருத் இசையில் `கூலி' படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளாக வெளியானது `மோனிகா'. `ஜெயிலர்' படத்தில் `காவாலா' எப்படி ஹிட்டானதோ, அதே போல மோனிகா பாடலும் பெரிய ஹிட், பூஜாவின் டான்ஸும் நல்ல வரவேற்பை பெற்றது.
`தக் லைஃப்' படத்தின் ரிசல்ட் நெகட்டிவாக இருந்தாலும், பாடல்கள் எல்லாம் ஃபுல் பாசிட்டிவ் தான். குறிப்பாக முத்தமழை, அஞ்சு வண்ண பூவே இரண்டும் பலரது ஃபேவரைட் ஆனது. படத்தின் இசை வெளியீட்டில் முத்தமழை பாடிய தீ வர முடியாமல் போக, அவருக்கு பதிலாக மேடையில் அப்பாடலை பாடினார் சின்மயி. முத்தமழை நன்றாக இருப்பது தீ குரலிலா? சின்மயி குரலிலா? என்ற பட்டிமன்றம் வைக்கும் அளவு போனது. இறுதியில் சின்மயி குரலில் ஒரு முத்தமழை படத்தின் ஜுக் பாக்சில் இடம் பிடித்தது க்யூட் தகவல்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவானது சூர்யாவின் `ரெட்ரோ'. அதிலிருந்து வெளியான `கனிமா' பெரிய ஹிட். அதிலும் பாடலில் இருந்த ஹூக் ஸ்டெப் தாறுமாறு ட்ரெண்ட் ஆனது. பலரும் அந்த நடனத்தை ஆடி வைரல் செய்தார்கள்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவான `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்திலிருந்து வந்த `கோல்டன் ஸ்பேரோ' செம மார்டனாக ஈர்த்தது. இந்தப் பாடலுக்குப் பிறகு பாடகி சுபலாஷினி அடுத்தடுத்து பல பாடல்களில் பிஸியானார்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளியான இன்னொரு படம் `தலைவன் தலைவி'. இந்தப் படத்தில் சந்தோஷ் - சுபலாஷினி பாடி வெளியான பொட்டல முட்டாயி தனி ட்ரெண்டானது. இப்பாடலின் ஸ்டெப்பும் படு ஜோராக வைரல் ஆனது.
இந்தாண்டு அதிக பேர் முணுமுணுத்த ஒரே பாடல் ட்யூட் படத்தின் ஊரும் ப்ளட் பாடலாக தான் இருக்கும். சாய் அப்யங்கர் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிளாக வந்து ஹிட்டாகி, பின்பு படத்தின் பின்னணி இசையிலும் முக்கிய பங்கு வகித்தது. இன்னும் சொல்லப்போனால் படையப்பாவின் ரஜினி - சௌந்தர்யாவை அழைத்து வரும் காட்சியில் ஊரும் ப்ளட் பொருத்தமாக இருக்கிறது என எடிட் செய்து பார்க்கும் அளவுக்கு காட்டுத்தீயாய் பரவியது.
லியோன் ஜேம்ஸ் இசையில் வந்த `டிராகன்' படத்தில் பெரிய ஹிட்டானது `வழித்துணையே'. பலரது இன்ஸ்ட்டா ரீல்ஸ்களின் ட்ரெண்டிங் அடித்தது சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல்.
இவை இல்லாமல் பழைய பாடல்களை பயன்படுத்துக் கொண்ட புதுப்படங்கள், அதன் மூலம் மீண்டும் ட்ரெண்ட் ஆன பாடல்களும் உண்டு.
கூலி படத்தின் புரோமோ வந்த போதே `தங்கமகன்' படத்தில் `வா வா பக்கம் வா' பாடலின் ரீமிக்ஸ் வடிவமாக உருவாக்கப்பட்ட `டிஸ்க்கோ' பாடல் பயன்படுத்தப்பட்டது. `கல்லூரி வாசல்' படத்தின் `லயோலா காலேஜ் லைலா' பாடலையும் பயன்படுத்தி இருந்தனர்.
அஜித்தின் `குட் பேட் அக்லி' படமே அஜித்தின் மேஷப் போல தான் இருந்தது. அதே போல் படத்திலும் நிறைய ரெட்ரோ பாடல்களை பயன்படுத்தி இருந்தனர். `சகலகலா வல்லவன்' படத்தின் `விக்ரம்' படத்தின் `என்ஜோடி மஞ்சக்குருவி', `நாட்டுப்புறப் பாட்டு' படத்தின் `ஒத்த ரூபா', `எதிரும் புதிரும்' படத்தின் `தொட்டு தொட்டு பேசும்' போன்ற சினிமா பாடல்களும் தமிழில் ஹிட்டான `ஸ்டவ்வு மேல கடாயி' ஓடியா மொழியில் ட்ரெண்டான `Chhi Chhi Chhi Re Nani' என படமே ஒரு மிக்ஸர் ஆல்பமாக இருந்தது.
`மலையூர் மம்பட்டியான்' படத்தின் ரீமேக்காக உருவான `மம்பட்டியான்' படத்தில் இருந்த பாடல் `மலையூரு நாட்டாம'. இந்தப் பாடலை டூரிஸ்ட் ஃபேமிலியின் ஒரு முக்கிய காட்சியில் பயன்படுத்த மொத்த தியேட்டரும் பிளாஸ்ட் ஆனது, பாடலும் ட்ரெண்ட் ஆனது.
சாய் அப்யங்கர் இசையில் `ட்யூட்' படத்தின் அத்தனை பாடல்களும் மெகா ஹிட். ஆனால் அதை தாண்டி அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ஹிட்டனது. `புதுநெல்லு புதுநாத்து' படத்திலிருந்த `கருத்த மச்சான்' பாடல் படத்தின் ஒரு காட்சியில் வந்து மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தது பாடல்.
`ரோஜா ரோஜா' பாடல் படத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும், இணையத்தில் பெரிய ட்ரெண்ட் ஆனது. அதற்கு காரணம் பாடகர் சத்யன். அவர் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு இசை கட்சேரியில் இப்பாடலை பாடிய வீடியோ கிளிப் வைரலாக, பல பேட்டிகள் மூலம் பாடகர் சத்யனும் ட்ரெண்டிங்கில் வந்தார்.
பிற மொழியில் பெரிய ஹிட்டான பாடல்கள் கொண்ட படம் இந்தியில் வெளியான `Saiyaara' தான். படத்தில் 7 பாடல்கள், 7 இசையமைப்பாளர்கள் பணியாற்றினார். படமும் அசுர ஹிட். பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க, ஒரு மணிநேரம் ஓடக்கூடிய படத்தின் எக்ஸ்டன்டட் ஆல்பம் வெளியிடப்பட்டு அதுவும் ஹிட்டானது.
நம்ம ஊர் சாய் அப்யங்கர் இசையமைத்த முதல் படம் என்றால் மலையாளத்தில் வெளியான `பல்டி' தான். அதில் வந்த `ஜாலக்காரி' பாடல் இந்த ஆண்டு வைரலில் முக்கியமான இன்னொரு பாடல்.
ஜேக்ஸ் பிஜோய் இசையில் உருவான மலையாளப்படம் `நரிவேட்டா'. இந்தப் படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய `மின்னல் வலா' பாடல் மிகப்பெரிய ட்ரெண்டானது. பல ரீல்ஸ்களில் பயங்கர வைரல் ஆகி பிரபலமானது பாடல்.
மலையாள திரையுலகிலேயே அதிக வசூல் செய்த படம் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து வெளியான `லோகா'. இப்படத்தில் வந்த `கிளியே கிளியே' பாடலும் செம்ம ட்ரெண்ட். இது `Aa Rathri' என்ற மலையாளப்படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல். லோகா படத்துக்கு பிறகு இந்தப் பாடல் மீண்டும் டிரெண்ட் ஆனது.
அதே போல இந்த ஆண்டு அதிக ரீல்ஸ்களின் பயன்படுத்தப்பட்ட ஒரு பாடலும் ஒரு பழைய பாடல் தான். மெகா ஹிட்டான ரன்வீர் சிங் படமான `துரந்தர்' படத்தில் இடம்பெற்ற Ishq Jalakar பாடல், 1960ல் ரோஷன் இசையில் உருவான `Barsaat Ki Raat' படத்தில் இடம்பெற்ற Na To Karavan Ki Talash Hai பாடலின் மார்ட்டன் வடிவம் தான்.