நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின்போது, அவரது காதலி அகிலாவிடம் "வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொள்கிறாயா?" எனக் கேட்டிருந்தார். அவரும், சற்றே அதிர்ச்சி கலந்த புன்னகையில் வெட்கப்பட்டார். பின்னர், அகிலா தன வாழ்வில் எவ்வளவு முக்கியம் என இயக்குநர் அபிஷன் பேசினார். சமீபத்தில் அபிஷன் ஜீவின்ந்துக்கு திருமணப் பரிசாக தயாரிப்பாளர் மகேஷ் BMW காரை பரிசளித்திருந்தார்.
இந்த நிலையில், அபிஷன் ஜீவின்ந்த் - அகிலா நிச்சயதார்த்தம் சென்னையில் சினிமா பிரபலங்கள் மத்தியில் அக்டோபர் 30ம் தேதியும், திருமணம் அக்டோபர் 31ம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியிலும் நடைபெற்றது. புதுமண தம்பதிகளான அபிஷன் ஜீவின்ந்த் - அகிலாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில் தன் மனைவி அகிலாவுடன் செய்தியாளர்களை இன்று சந்தித்து நன்றி தெரிவித்தார் அபிஷன் ஜீவின்ந்த். இந்நிகழ்வில் அபிஷன் - அகிலாவின் காதல் கதையை பற்றி கேட்ட போது, "நாங்கள் பள்ளியில் படிக்கும் போது இருந்தே நண்பர்கள். ஆறாம் வகுப்பு படிக்கும் போது இருந்து அவரை எனக்கு தெரியும். ஒரு கட்டத்துக்கு மேல் என் காதலை சொன்னேன். முதலில் நோ சொன்னார், பின்பு ஏற்றுக் கொண்டார்" எனக் கூறினார் அபிஷன்.
தயாரிப்பாளர் கொடுத்த காரில் எங்கு முதன்முதலாக சென்றீர்கள்? எனக் கேட்டதும் "அகிலா ரொம்ப நாளாக ECR அழைத்து போக சொல்லிக் கேட்டுக்கொண்டே இருந்தார். பைக்கில் சென்றால் வெயில் அடிக்கும் என்பதால் போகாமலே தவிர்த்து வந்தேன். இப்போது காரில் அவரை அழைத்து சென்றேன்" என்றார்.
அபிஷனின் அடுத்த படங்கள் பற்றி கேட்டப்பட்ட போது "இப்போது ஹீரோவாக ஒரு படம் நடித்திருக்கிறேன், படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்போது எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதம் படம் வெளியாகவுள்ளது. என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் செய்ய வேலைகளும் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அந்தப் படம் துவங்கும்." என்றார்.