Ganesh K Babu Dark
கோலிவுட் செய்திகள்

இந்த கதையை தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன்! - `டாடா' கணேஷ் கே பாபு | Ganesh K Babu| Dark

நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது 'டாடா' படத்திற்கான தேங்க்ஸ் தான்.

Johnson

'டாடா' புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதி தயாரித்துள்ள படம் `டார்க்'. இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு பேசுகையில், ''13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. நமக்கு சினிமா வராது, பத்து வருடமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ என நினைத்தேன். அதனால் இதனை விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்று விட்டேன். அந்த தருணத்தில் ஒரு போன் வருகிறது. டாடா படத்தின் கதையை சொல்கிறேன். அந்த கதையை சொல்லி முடித்தவுடன் ஒரே நாளில் அதனை படமாக உருவாக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.

கல்யாண் என்னுடைய நண்பர். நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம். என்னுடன் இணைந்து பயணித்தான். எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது. அவன் நல்ல வேலையை பார்த்துக் கொண்டு, நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனது வேலையை நான் தான் கெடுத்தேன். அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவனுடைய ஆபீஸில் ஒரு பக்கத்தை ஒதுக்கி கொடுத்தான். நாளடைவில் அது என்னுடைய ஆபீஸ் ஆக மாறிவிட்டது. சிறிது நாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டான். இது பற்றி கேட்டபோது நீ முதலில் இயக்குநர் ஆகு. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

கல்யாணின் மனைவியிடம், 'இவன் ஒரு நாள் நிச்சயம் பெரிய ஆளாகி விடுவான்' என்று சொன்னேன். இன்று அது நடந்து விட்டது. இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன். நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது 'டாடா' படத்திற்கான தேங்க்ஸ் தான். இந்தப் படத்தின் கதையை நான் தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன். ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன் வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன் அஜய் ஓகேவா என்று. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால்.. எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இந்தப் படம் அஜயின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  இந்த மாதம் 'டார்க்' வெளியாகிறது. அடுத்த மாதம் 'கராத்தே பாபு' வெளியாகிறது. அதற்குப் பிறகு 'ப்ளடி பாலிடிக்ஸ்' படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.