தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகர் ஜெய். இவர் நடித்து சமீபத்தில் வெளியான `சட்டென்று மாறுது வானிலை' படத்திற்காக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், அவர் ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாறினேன் என்பதற்கு அளித்த விளக்கம் பேசு பொருளாகி உள்ளது. அந்த பேட்டியில் அவர், "நான் 2011லிருந்து இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன். அது எதனால் என்றால் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறேன், கிறிஸ்தவத்தின் ஜெபமாலை அணிந்து ஒருவருடம் விரதம் கடைபிடித்திருக்கிறேன். எல்லா கடவுளும் சரி என்றுதான் இருந்தேன். சில நேரங்களில் கோயில்களில் சில அவமானங்கள் ஏற்பட்டன. ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள் எல்லாம் நடந்தது. பின்னர் ஒருமுறை மசூதி சென்றபோது எல்லோரும் வரிசையாய் நின்று பிரார்த்தனை செய்தார்கள். எல்லோருக்கும் நான் ஒரு நடிகர் என தெரிந்தாலும் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. மசூதி உள்ளே யாரும் என்னிடம் பேசக்கூட இல்லை. வெளியே சென்ற பின்னரதான் பேசினார்கள், அப்போதும் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பவில்லை.
எனக்கு அப்போது இங்கே ஒரு சமத்துவம் இருப்பதாக தோன்றியது. அதற்குள் வந்தவுடன் கடவுளைத்தான் அவர்கள் பெரிதாகப் பார்க்கிறார்கள். எவ்வளவு பெரிய பிரபலமான நபர் வந்தாலும் அவரைப் பெரியதாகப் பார்க்கவில்லை என்பது தெரிந்தது. நாம் நினைத்ததை வேண்ட, கேட்க நமக்கு ஒரு இடமும் நேரமும் கொடுக்கிறார்கள். யாருக்காகவும் நம்மைக் கிளம்பச் சொல்லாமல், நமக்கான அவகாசத்தை அவர்கள் கொடுத்தார்கள். இவை எல்லாம் இங்கு இருப்பது எனக்கு நன்றாக இருந்தது. மேலும் இதனைப் பின்பற்ற துவங்கியதும் என்னுடைய சுய கதாபாத்திரமும் மாறத் துவங்கியது. எல்லாவற்றிலும் நல்ல விஷயங்கள் கூறி இருந்தாலும், இவர்கள் இன்னும் புரியும்படி சொல்கிறார்கள், அவர்கள் நடந்துகொள்வதும் எனக்கு உகந்ததாக இருந்தது. இவை எல்லாவற்றையும் நானே பார்த்து உணர்ந்ததால் மிகவும் திருப்தியாக இருந்தது.
குறிப்பாக, எனக்குப் பிறருக்கு உதவும் மனப்பான்மை வந்திருக்கிறது. முன்பெல்லாம் உதவ வேண்டும் என தோன்றும், சின்னதாகச் செய்துவிட்டு பிறகு நம்முடைய தேவைகளுக்குச் செலவு செய்யத் துவங்குவோம். ஆனால், இங்கு வந்தபின்னர் நம்முடைய சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என அழுத்தமான விதிகள் உள்ளது. அதைப் பின்பற்ற துவங்கியதும் தேவை இல்லாத பொருட்களை வாங்குவதை நிறுத்தி, அந்தப் பணத்தை உதவிக்குக் கொடுக்கிறேன்.
இதில் இன்னொரு விஷயம் என்ன என்றால் நான் மட்டுமதான் மாறி இருக்கிறேன், வீட்டில் அப்படியேதான் இருக்கிறார்கள். இன்னுமும் அவர்கள் கோயிலுக்குப் போய் வந்தால் விபூதி வைப்பார்கள், அதை அன்பாக வாங்கிக் கொள்வேன" என்றார்.