Keerthiswaran Dude
கோலிவுட் செய்திகள்

”இது தமிழ்நாடு.. அந்த பெரியவர் கருத்தை இனியும் சொல்வோம்” - கீர்த்தீஸ்வரன் | Dude | Keerthiswaran

இந்தப் படம் சில விவாதங்களை கிளப்பி இருக்கிறது. சொல்லாத விஷயங்களை சொல்லி இருக்கிறோம் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

Johnson

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் நடிப்பில் வெளியான படம் `டியூட்'. இப்படம் வெளியாகி ஐந்தே நாட்களில் 95 கோடி வசூலித்துள்ளது. படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்படி படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்தினர்.

இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்து வசூல் சாதனைகள் ஒரு புறம் நடக்கிறது என்றாலும். கணவன், மனைவி, தாலி, பெண் உரிமை, சாதி போன்றவற்றை சார்ந்து இப்படம் வைத்துள்ள கருத்துக்கள் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக படத்தின் மீது எதிர்மறை விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துள்ளனர். எனவே அவற்றுக்கு இந்த நிகழ்வில் பதில் அளித்திருந்தார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்.

இதில் பேசிய இயக்குநர் கீர்த்தீஸ்வரன் "ஒரு விஷயத்தை தொட்டால் அது வெற்றியாகும் என்பதை பிரதீப்பின்  இந்த தொடர் மூன்றாவது வெற்றிப்படம் நிரூபித்துள்ளது. இந்தப் படத்தில் மிக தைரியமாக சில விஷயங்கள் பேசுகிறோம், வசனங்கள் ஒவ்வொன்றையும் சொல்லும் போது அதை முதலில் பாராட்டி, இவற்றை எல்லாம் சொல்லியே ஆகணும் என உற்சாகம் தருவது பிரதீப் ப்ரோ தான். படத்தின் இறுதியில் 'உங்க ஆணவத்துக்கு கொலை பண்ணுவீங்களா டா. அவ்வளவு ஆணவம் இருந்தா நீங்க போய் சாவுங்க' என்று ஒரு வசனம் இருக்கும். அது முதலில் அங்கு இல்லை. இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தான் திருநெல்வேலி கவினின் ஆணவக்கொலை நடந்தது. மிகவும் வருத்தமாக இருந்தது. இதற்கு ஏதாவது நாம் சொல்ல வேண்டும் என கூறியது பிரதீப் தான். அதன் பின் வைத்த வசனம் தான் அது.

Keerthiswaran

டியூட் படத்தின் கரு என்ன என்றால், ஒரு பெண்ணுக்கான துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை, அவளின் தந்தைக்கோ, அண்ணனுக்கோ, உறவினருக்கோ யாருக்குமே இல்லை. அவளுக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது. இதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. இதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

படத்தின் வசூல் இன்று வரை 95 கோடி. ஆனால் அது முடிவல்ல, நாளை 100 கோடி தொடும். இன்னும் அதிகமாகும். இதற்காக மக்களுக்கு நன்றி.

மேலும் இந்தப் படம் சில விவாதங்களை கிளப்பி இருக்கிறது. சொல்லாத விஷயங்களை சொல்லி இருக்கிறோம் என்றெல்லாம் பேசுகிறார்கள். எனக்கு என்ன தோன்றியது என்றால், இது தமிழ்நாடு. இந்த மாநிலத்தில் நிறைய பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள். பெரியவரும் ஒருவர் இருந்திருக்கிறார். அவரெல்லாம் நிறைய சொல்லி இருக்கிறார். அவர் வழியில் வந்துதான் நாங்கள் இதனை பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இப்படியான கூற்றை முன்வைப்பது புதிதல்ல. அதை நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு நாங்களும் கொண்டு போய் சேர்க்கிறோம். ஆனால் அதை எவ்வளவு பொழுதுபோக்கு கலந்து, சினிமா மொழியில் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொல்வதே என் ஆசை. அதை இனி என் அடுத்த படங்களிலும் செய்ய முயற்சிப்பேன்." என்றார்.