A.J.பாலகிருஷ்ணன் இயக்கி 2025இல் வெளியான படம் `திருக்குறள்'. இப்படத்தில் வல்லுநராக கலை சோழன், வாசுகியாக தனலட்சுமி நடித்திருந்தனர். ‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்தது. இப்போது அந்தப் படத்தின் தொடர்ச்சியாக ’திருக்குறள்’ படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துகளை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் `Once Upon a Time in Hindustan' என தயாராகிறது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் திருவிழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், `திருக்குறள்' படம் திரையிடப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்தோடு ’திருக்குறள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஆங்கில மொழியில் உருவாகும் `Once Upon a Time in Hindustan' படத்தின் நான்கு நிமிட மாதிரி காட்சி திரையிடப்பட்டது.
அதனைப் பார்த்து பலரும் இன்றைய நவீன காலகட்டத்திற்கு இந்த அறம் எப்படி சாத்தியம் என்று இயக்குநர் A.J. பாலகிருஷ்ணனிடம் எழுப்பிய கேள்விக்கு, அவர் "நாகரீகம், செயல்கள், எண்ணங்கள் மாறும். ஆனால், அறம் ஒருபோதும் மாறாது" என்று பதிலளித்துள்ளார்.