தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் `பாக்கெட் நாவல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. `ஆரண்ய காண்டம்' மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தியாகராஜன் குமாரராஜா. முதல் படத்தின் மூலமே பலத்த பாராட்டுகளை பெற்ற இயக்குநராக வரவேற்கப்பட்டார். அடுத்ததாக அவர் இயக்கிய `Super Deluxe', `Modern Love Chennai' ஆந்தாலஜி தொடரில் `நினைவோ ஒரு பறவை' ஆகியவற்றை இயக்கினார்.
`பாக்கெட் நாவல்' 7 ஆண்டுகளுக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம். `Super Deluxe' படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி உடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கெனவே `Modern Love Chennai' ஆந்தாலஜி தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய `நினைவோ ஒரு பறவை'க்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.
`லீலை', `கொலைகாரன்' படங்கள் `வதந்தி' வெப் சீரிஸ் போன்றவற்றை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதை திரைக்கதையை எழுதியிருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு, சத்தியராஜ் நடராஜன் படத்தொகுப்பு செய்யும் இப்படத்தை தியாகராஜன் குமாரராஜாவே தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.