Vishal Magudam
கோலிவுட் செய்திகள்

"14 மாதங்கள் நடிக்க முடியாமல் வீட்டிலேயே இருந்தேன்" - விஷால் | Vishal | Magudam

எல்லாம் கடந்துவந்து இன்று உங்கள் முன்னால் நிற்க காரணம், என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், வேறு யாராவதாக இருந்தால் விட்டுச் சென்றிருப்பார்கள்.

Johnson

விஷால் இயக்கி நடித்துள்ள `மகுடம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விஷால், "ஒவ்வொரு நடிகனுக்கு அவனது பயணத்தில் இக்கட்டான சூழல் ஏற்படும். அந்தச் சூழலில் எல்லோரும் அவனைத் தீர்த்துக்கட்டப் பார்ப்பார்கள். அவன் கரியரே முடிந்தது எனச் சொல்வார்கள். 14 மாதங்கள் நடிக்க முடியாமல் வீட்டில் உட்கார்ந்தேன். அதற்குக் காரணமானவர் யார் என நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதை எல்லாம் கடந்துவந்து இன்று உங்கள் முன்னால் நிற்கக் காரணம் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், வேறு யாராவதாக இருந்தால் விட்டுச் சென்றிருப்பார்கள். அதன் பின்னர் நான் நன்றி சொல்ல வேண்டியது ஆர்.பி.சௌத்ரி சாருக்கு. இக்கட்டான நேரத்தில் எனக்கு ஆதரவு தந்தார். இவர்களைத் தாண்டி இன்னொருவரும் இருக்கிறார். திருப்பூர் சுப்ரமணியம் அண்ணன். அவர் கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையும் வீண் போகக்கூடாது என்பதற்காகத்தான் நான் அதிகமாக உழைத்து இந்தப் படத்தை முடித்தேன்.

இது எனக்கு நடிகராகவும், இயக்குநராகவும் சவாலான படம். ஸ்ப்ளிட் பர்சனாலிட்டிபோல நான் இயங்க வேண்டி இருந்தது. எனவே, எனது நடிகர்களை எல்லாம் ஆக்‌ஷன் சொன்ன பின் ஒரு நொடி கழித்துத்தான் நடிக்கச் சொல்வேன். அவர்கள் நடித்ததைப் பார்த்துவிட்டு வந்து நான் நடிப்பேன். படக்குழுவின் எல்லா விஷயங்களிலும் நான் தலையிட்டுச் செயல்பட்டத்தை எல்லோரும் அனுமதித்தனர். அதனால்தான் இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது.

இந்த இடத்துக்கு வருவது 35 வருட கனவு. என் அப்பாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னை அர்ஜூன் சாரிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட நான்கரை மணிநேரம் நின்று கொண்டே காத்திருந்தார். ’ஸ்கூலில் உன் அட்மிஷனுக்கு நின்றது போல இங்கும் நிற்பேன்’ எனச் சொன்னார். என் கனவை நிறைவேற்றிய அப்பாவுக்கு நன்றி கூற வேண்டும். என் அப்பா இப்படி என்றால் என் அம்மா இன்னும் மேலே. ’சண்டக்கோழி’ படம் நடக்க முக்கியமான காரணமே என் அம்மாதான். ’அந்தப் படத்துக்கு இவ்வளவு செலவு பண்ண முடியாது’ என அப்பா சொன்னதும், ’நீங்கள் செய்கிறீர்களா, நான் செய்யவா’ என ஆதரவாக பேசினார். ’இந்தப் படம்தான் என் பையனை ஆக்ஷன் ஹீரோவாக மாற்ற போகிறது’ என்றார். அவர்கள் கொடுத்த நம்பிக்கையால்தான் 35 வருடங்கள் கழித்து உங்கள் முன்பு இயக்குநராக நிற்கிறேன். 

Vishal

என் குருநாதர் ஆக்ஷன் கிங் அவர்களுக்கும் நன்றி சொல்லுகிறேன். ’க்ளாப் போர்டை கீழே வைத்துவிட்டு, போய் போட்டோ ஸுயூட் எடுத்துக் கொள்’ என்று சொன்னது அவர்தான். ’போய் நடிக்க ஆரம்பி’ என்று சொன்னார். இயக்குநராக நான் செய்யும் விஷயங்கள் அவரிடம் கற்றுக்கொண்டது. ராம்கோபால் வர்மாவின் ’சிவா’ படம் பார்த்தபின் இயக்குநராக நினைத்தேன். இன்று நான் சொல்கிறேன், ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய விரும்பினால், அதுவாக நீங்கள் மாறுவீர்கள். என்னால் முடிகிறது என்றால் உங்களாலும் முடியும். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும். அந்த எட்டு நிமிடக் காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. அதை ஆடியன்ஸ் எப்படி கைதட்டி பார்ப்பார்கள் எனப் பார்க்கக் காத்திருக்கிறேன்" என்றார்.