Ram Habeebi
கோலிவுட் செய்திகள்

”பிரியாணி செய்யும் காட்சி இடம்பெறாத ஓர் இஸ்லாமிய படம்!” - ராம் | Ram | Habeebi

மீரா கதிரவன் என்னதான் செய்கிறார்? நம்முடைய கரம்பிடித்து அவர் ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அந்த ஊர் நம்முடைய ஊர்போலவே இருக்கிறது.

Johnson

`அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு' போன்ற படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் தற்போது கஸ்தூரி ராஜா நடிப்பில் `ஹபீபி' என்ற படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். மே 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ராம், "நிறைய இஸ்லாமிய பெயர்கள் ஒரு தமிழ்ப்படத்தில் ஒலிக்கக் கேட்பது இதுவே முதல்முறை. நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவில் இந்தப் பெயர்களை அதன் அர்த்தத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் மீரா கதிரவன். எனக்குள் சுமந்தது திரியும் ஊரை, குடும்பத்தை, காதலை, எனக்குத் தெரிந்த மனிதர்களின் வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்கிற மீரா கதிரவனின் வரிகளோடு, `ஹபீபி' படம் துவங்குகிறது. ஆனால், அவர் தன் ஊருக்காக நம்முடைய இரக்கத்தைக் கேட்டு வரவில்லை. இந்த ஊருக்காக அழச் சொல்லி சோகம் சம்பாதிக்க வரவில்லை. என் ஊர்தான் சிறந்த ஊர் என தற்பெருமை பேசும் கதையையும் சொல்லவில்லை.

மீரா கதிரவன் என்னதான் செய்கிறார்? நம்முடைய கரம் பிடித்து அவர் ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அந்த ஊர் நம்முடைய ஊர் போலவே இருக்கிறது. அந்த ஊருக்கும் நம் ஊருக்கும் பெரிய விஷயம் எதுவும் இல்லை. நம் வாழ்வுக்கும் அவர்கள் வாழ்வுக்கும் வித்தியாசம் இருக்கிறதா எனப் பார்த்தால் அதுவும் இல்லை. இந்தப் படத்தில் பிரியாணி செய்யும் காட்சி இடம்பெறவே இல்லை. கசாப்புக் கடையில் கறிவெட்டும் பாய், பச்சை தயாத்து போட்ட நபர் என யாரும் இல்லை. 

எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது என்பதில் மீரா சொல்ல வருவது, நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். ’ஹபீபி’ என்ற படம் அதைத்தான் நிறுவுகிறது. இதுவரை இஸ்லாமியர்கள் குறித்து இருக்கும் மொத்த சித்திரத்தையும் நம் மனதிலிருந்து முற்றிலும் அகற்றக்கூடிய படம்தான் ’ஹபீபி’.

Ram

ஆண்கள் குறைவாகவும், பெண்கள் அதிகமாவும் உள்ள ஒரு பட போஸ்டரையே நான் இப்போதுதான் பார்க்கிறேன். தமிழில் வரப்போகிற முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இதுதான். மீரா கதிரவனும், ’ஹபீபி’யும் வெற்றி பெற நான் துவா செய்கிறேன்" என்றார்.