விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள `ஆர்யன்' அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் செல்வராகவன் வில்லன் ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்காக பேட்டி அளித்திருக்கும் செல்வராகவனின் ஒரு பதில் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.
"உங்களுக்கு நடந்த விஷயங்களிலேயே மிக கோபம் வந்தது என்றால் எதை சொல்வீர்கள்?"
"இன்னும் ஒரு ஆறு மாதத்தில் அது வரும். நானே என்னை கேட்டுக் கொண்டிருக்கிறேன். எப்படி இத்தனை முறை உன்னால் எழுந்து நிற்க முடிகிறது. கலை மீது எனக்கிருக்கும் காதல் தான் காரணம் என நினைக்கிறேன். என்னுடைய வேலை எனக்கு பிடித்திருக்கிறது. அது கொடுக்கும் உத்வேகம் என்னை திரும்ப எழச் செய்கிறது.
கிட்டத்தட்ட எனக்கு கல்லறை கட்டி பூச்செண்டு எல்லாம் வைத்து விட்டார்கள். அதிலிருந்து ஒரு வாரம் முன்பு தான் வெளியே வந்தேன். அது என்ன விஷயம் என இப்போது சொல்ல மாட்டேன். நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். என்னை பொறுத்தவரை என்னுடைய வேலை எனக்கு முக்கியம். சரி காயப்படுத்திவிட்டார்கள் இப்போது என்ன செய்வது, பேண்டேஜ் போட்டு மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும். இதற்காக உட்கார்ந்து தாடி வளர்த்து ஆலா வேண்டும் என்றால் 5 வருடம் கூட அழலாம்."
"சிலமுறை உள்ளுணர்வு சொல்லும் விஷயங்களை கேட்காமல் தப்பாக நடந்திருக்கிறதா?"
"உள்ளுணர்வு எப்போதும் தப்பாக சொல்லாது. முதன்முறையே சொல்லும் வேண்டாம் இது வேலைக்கு ஆகாது என. அதைக் கேட்காமல் நாம் தான் பட்டு தெரிந்து கொள்வோம். சில சமயம் அந்தப் பெண் அழகாக இருக்கிறார், என்ற ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அந்த உள்ளுணர்வை புறக்கணித்திருப்போம். கடவுள் அந்த உள்ளுணர்வு மூலம் பேசுவார்." எனப் பேசி இருக்கிறார்.
செல்வராகவன் எந்த விஷயத்தை பற்றி ஆறு மாதங்களில் தெரியும் என சொன்னார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.