Producers Council Tamil Cinema
கோலிவுட் செய்திகள்

விமர்சனம், நடிகர் சம்பளம், OTT வியாபாரம் - தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 8 முக்கிய தீர்மானங்கள்!

இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் Revenue Share-ல் மட்டுமே தயாரிப்பது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், இயக்குநர்கள் திரையரங்க வியாபாரத்திற்கு ஏற்றார் போல் தயாரிப்பாளருக்கு பட்ஜெட் தயார் செய்து தர வேண்டும்.

Johnson

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில், திரைப்பட விமர்சனங்கள், OTT வெளியீட்டு காலம் மற்றும் நடிகர் சம்பளங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், திரையரங்குகள் மற்றும் டிக்கெட் புக்கிங் முறைகளை மேம்படுத்தவும், தயாரிப்பாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2025 ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலைமாமணி விருது வழங்கியது, அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்திட ஒரே இடத்தில் அனுமதி தருவது, உள்ளுர் சேவைவரியை 4-சதவிகிதமாக குறைத்தது, ஜெய்சங்கர் பெயரை அவர் வாழ்ந்த தெருவிற்கு சூட்டியது எனப் பல விஷயங்களுக்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்திருந்தது பொதுக்குழு. மேலும் இதில் திரைப்படங்கள் சார்ந்தும் தொழிலாளர்கள் சார்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் சில முக்கியமான தீர்மானங்கள் என்ன என்பதை இதில் பார்க்கலாம்.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் என்ற இணையதள புக்கிங்கை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

Producer Council

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 2024-செப்டம்பர் மாதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்களிலும் கனிணிமயமாக்க பட வேண்டும் என்றும், அனைத்து திரையரங்களுக்களையும் ஒருங்கிணைக்கும் Centralized server உருவாக்க வேண்டும் என்றும், முன்னனி நடிகர்களின் திரைப்படங்கள் 8-வாரங்கள் கழித்து தான் OTT-யில் வெளியாகவேண்டும் என்றும், அடுத்தகட்ட நடிகர்கள் திரைப்படங்கள் 6-வாரங்கள் கழித்து தான் OTT-யில் வெளியாக வேண்டும் என்றும், சிறிய முதலீட்டு திரைப்படங்கள் 4-வாரங்கள் கழித்து தான் OTT-யில் வெளியாக வேண்டும் என்றும் பேசப்பட்டுள்ளது. மேலும், Centralized server உருவாக்கப்படும் பட்சத்தில் தயாரிப்பாளர்கள் அவர்களுடைய திரைப்படங்களின் வசூலை இருந்த இடத்திலேயே பார்த்துக்கொள்ள முடியும். மேலும், டிக்கெட் புக்கிங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி டிக்கெட் புக்கிங்கில் ஒரு குறிப்பிட்ட சதவிகதம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டுள்ளது அதனை தற்போது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் திரைப்படங்கள் வருடத்திற்கு சுமார் 300 திரைப்படங்கள் வெளியாகிறது. அதில், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் 250 வரை வெளியாகிறது. இதனால் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு சரியான முறையில் திரையரங்குகள் கிடைப்பதில்லை. இதனை சரிசெய்யும் பொருட்டு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அடங்கிய திரைப்பட வெளியீட்டு ஒருங்கிணைப்பு குழு (Release Regulation Committee) அமைக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

திரைப்படத்தின் விமர்சனம் என்று வரம்பு மீறி செயல்படும் Youtube-சேனல்கள் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், பி.ஆர்.ஓ. யூனியன் ஆகிய அமைப்புகள் இணைந்து சட்டரீதியாகவும், திரைத்துறை ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளும் பொதுக்குழுவில் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழ்த் திரைப்படங்களின் படத்தலைப்பு சம்பந்தமாக சமீபகாலத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருவதால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் மட்டுமே தமிழ்த் திரைப்படங்களின் படத்தலைப்பு பதிவு செய்வது சம்பந்தமாக மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் பேசி, முறைப்படுத்தி சீர்திருத்தங்கள் கொண்டுவர இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழ் சினிமா தற்போது OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களில் உள்ளது போல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் Revenue Share படம் நடிக்க வேண்டும் தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. ஆகையால் இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் Revenue Share-ல் மட்டுமே தயாரிப்பது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இயக்குநர்கள் திரையரங்க வியாபாரத்திற்கு ஏற்றார் போல் தங்களது திரைப்படங்களை உருவாக்க, தயாரிப்பாளருக்கு பட்ஜெட் தயார் செய்து தர வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

எந்த ஒரு தனியார் அமைப்பு விருது வழங்கும் விழா அல்லது இசை நிகழ்ச்சி நடத்தினால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனுமதி கடிதம் பெற்ற பின்னர் தான் நடத்த வேண்டும். அவ்வாறு அனுமதி கடிதம் பெறாமல் விழா நடத்தப்படும் தனியார் அமைப்புகள் மீது சட்டரீதியாகவும், திரைத்துறை ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுக்குழுவில் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய அனைத்து உரிமைகளையும் (All Rights & Royalty) பெற்றுத் தர தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.