தனுஷ் அடுத்ததாக தமிழரசன் பச்சமுத்து இயக்கும் D56 படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான லொகேஷன் தேடல் பணிகளில் தமிழரசன் ஈடுபட்டுள்ளார். விஜய்குமாரின் `அறிவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டில் தமிழரசன் பச்சமுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன் மூலம் விஜய்குமாரும் D56-ல் நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.
தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் `D55' படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு D56 படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டு, `லப்பர் பந்து' படம் இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் தான் அடுத்து நடிக்கவுள்ளார் தனுஷ். இப்படத்துக்கான லொகேஷன் பார்க்கும் பணிகளில் இறங்கியுள்ளார் தமிழரசன் பச்சமுத்து. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த நிலையில் நேற்று `உறியடி' பட இயக்குநர் விஜய்குமார் `Fight Club', `Election' படங்களையடுத்து நடித்துள்ள `அறிவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விஜய்குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் தமிழரசன் பச்சமுத்து. அதற்கு நன்றி சொன்ன விஜய்குமார் "நன்றி ஐயா, முடிச்சிட்டு சீக்கிரம் வர்றோம்" எனப் பதிவிட்டுள்ளார். மீண்டும் அந்தப் பதிவை பகிர்ந்த தமிழரசன் பச்சமுத்து "மதுரைக்கு வரவும் #D56" என குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தனுஷ் நடிப்பில் தமிழரசன் இயக்கும் படத்தில் விஜய்குமாரும் நடிக்கிறார் என்பதை சூசகமாக தெரிவித்திருக்கின்றனர்.
தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள `கர' ஏப்ரல் 30 வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா முக்கிய பாத்திரங்களில் நடிக்க சாய் அப்யங்கர் இசையமையக்கிறார். இதற்கடுத்து தமிழரசன் பச்சமுத்து படத்திலும், பின்னர் மாரி செல்வராஜ் படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ்.