Ken Karunas Youth
கோலிவுட் செய்திகள்

"என்னுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்கள், Seen Zone செய்வார்கள்!" - கென் கருணாஸ் | Youth | Ken Karunas

தமிழில் உள்ளவர்களிடம் கதை சொன்னபோது மூன்று ஹீரோயின்கள் இருக்கும் படத்தில் எங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்றுதான் சொன்னார்கள். இப்போது அதே ஹீரோயின்கள் சிலர் முட்ட கலக்கி பாடலை பார்த்து வாழ்த்துகிறார்கள்.

Johnson

கென் கருணாஸ் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகும் படம் `யூத்'. இந்தப் படம் மார்ச் 19 வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான பேட்டியை அளித்து வருகிறார் கென் கருணாஸ். அப்படியான ஒரு பேட்டியில், "நான் நிறைய தயாரிப்பு நிறுவனங்களில் கதை சொன்னேன். கதை நன்றாக இருக்கிறது எனச் சொன்னாலும், என்னை ஹீரோவாக வைத்து எடுக்க யாரும் தயாராக இல்லை. வேற ஹீரோ பெயரைச் சொல்லி அவருக்கு சொல்கிறீர்களா என்றதான் சொன்னார்கள். அதற்கான காரணம் என்ன எனச் சொல்லப்படவே இல்லை. ஆனால் நான் அவர்களிடம், ’இல்லை சார்... நான் ஹீரோவாகத்தான் இந்தக் கதையையே எழுதினேன்’ என்றேன். இன்னொரு தயாரிப்பாளர், ’இவ்வளவு பட்ஜெட் எல்லாம் தர முடியாது’ என்றார்.

ஆனால், நான் எங்குமே விட்டுக்கொடுப்பதாய் இல்லை, உறுதியாக இருந்தேன். இப்போது இந்தப் படத்தை தயாரித்துள்ள கருப்பையா சாரிடம் நான் சொன்னது ஒன்றுதான். ’சார், நீங்கள் என்னை நம்பிப் போடும் ஒவ்வொரு காசுக்கும் நான் பொறுப்பானவனாக இருப்பேன். நான் ஹீரோ ஆகத் தான் வந்திருக்கிறேன், எனவே இந்தப் படம் வருகிறது என்பதை மக்களுக்கு கொண்டு சேர்த்துவிடுங்கள்’ என்றுதான் நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். இன்றுவரை பலரும், ’படத்தை நல்லமுறையில் புரமோஷன் செய்கிறீர்கள்’ எனச் சொல்கிறார்கள். அதற்கு நான் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அதேபோல பிரதீப் ரங்கநாதனோ, அபிஷனோ ’என்னுடன் எந்த ஹீரோயினும் நடிக்க தயாராக இல்லை’ எனச் சொன்னபோது சும்மா உருட்டுகிறார்கள் என நினைத்தேன். ’அதெப்படி, நல்ல கதையில் நடிக்க முடியாதது’ எனச் சொல்வார்கள் என நினைத்தேன். உண்மையிலேயே ’நடிக்க மாட்டேன்’ என்கிறார்கள். இதுதான் ரியாலிட்டி. தமிழில் உள்ளவர்களிடம் கதை சொன்னபோது, ’மூன்று ஹீரோயின்கள் இருக்கும் படத்தில் எங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும்’ என்றுதான் சொன்னார்கள். இன்னொன்று, ’எந்தப் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது என்று பார்த்து அதில்தான் நடிப்பேன்’ என்பார்கள். ஆனால், அதற்கு அவர்கள் பொருந்துகிறார்களா என்பதுதான் எனக்கு முக்கியம்.

Ken Karunas

அப்படி இல்லை என நான் சொன்னால், நிலையில் வருகையில் ரிஜெக்ட் செய்வார்கள். சில நடிகைகள் எல்லாம் மெசேஜை பார்த்துவிட்டு ரிப்ளை செய்யாமல் seen zone செய்வார்கள். இப்போது அதே ஹீரோயின்கள் சிலர் ’முட்ட கலக்கி’ பாடலைப் பார்த்து வாழ்த்துகிறார்கள். அன்று அவர்கள் என்னவைத்து படத்தை எடை போட்டார்கள். ஆனால் இந்தக் கதையை மட்டும் நம்பிவந்த மூவரைத்தான் நாயகிகளாக நடிக்க வைத்திருக்கிறேன். அதற்காக அவர்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன" எனப் பேசியுள்ளார்.