Suriya, Jyothika Sarvam Maya
கோலிவுட் செய்திகள்

"உங்களது நடிப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது" - நிவினை வாழ்த்திய சூர்யா - ஜோதிகா | Sarvam Maya

மிக நேர்த்தியாகவும், இயல்பாகவும், பார்ப்பவர்களைக் கட்டிப்போடும் வகையிலும் அமைந்திருந்தது. இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் அளிக்கும் அன்பைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

Johnson

நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு நடிப்பில் அகில் சத்யன் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மலையாளப்படம் `சர்வம் மாயா'. இப்படம் திரையரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்று பெரிய அளவில் வசூலைக் குவித்தது. சமீபத்தில் ஓடிடியில் இப்படம் வெளியான பின்னும் பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் பிரபேந்து பாத்திரத்தில் நடித்த நிவின் பாலிக்கு நட்சத்திர தம்பதியான சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து தெரிவித்து பரிசுப் பொருட்களை அனுப்பியுள்ளனர். நிவினுக்கு அனுப்பப்பட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், "அன்புள்ள நிவின், 'சர்வம் மாயா' படத்தின் வெற்றிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது நடிப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது. மிக நேர்த்தியாகவும், இயல்பாகவும், பார்ப்பவர்களைக் கட்டிப்போடும் வகையிலும் அமைந்திருந்தது. இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் அளிக்கும் அன்பைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதேபோல் இன்னும் பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களிலும், மைல்கற்களையும் நீங்கள் எட்ட வாழ்த்துகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் நிவின். அதில், "உங்கள் இருவரின் இந்த அன்பான செயலுக்கு மிக்க நன்றி சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடம்" என குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு, சூர்யா - ஜோதிகா, ’சர்வம் மாயா’ படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான Delulu பாத்திரத்தில் நடித்த ரியா ஷிபுவுக்கும் பரிசுகளை அனுப்பி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.