சுந்தர் சி, ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173' படத்தை இயக்க, கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதற்கிடையே நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 உருவாகிவரும் நிலையில், விஷால், கார்த்தி ஆகியோருடனும் படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். 2027 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் தலைவர் 173 ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே அறிவிப்பில் ஒட்டு மொத்த பேச்சும், தலைவர் 173 படம் நோக்கி திரும்பி இருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த அறிவிப்பு கமல் பிறந்தநாளான நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென நேற்று மாலையே அறிவிப்பை வெளியிட்டனர். `அருணாச்சலம்' படத்திற்கு பின் இப்படத்தின் மூலமாக 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறது ரஜினி - சுந்தர் சி கூட்டணி. இப்போதைக்கு சுந்தர்.சி தான் கோலிவுட்டின் பிஸியான இயக்குநராகி இருக்கிறார் என சொல்லலாம்.
முதலில் நயன்தாரா நடிப்பில் `மூக்குத்தி அம்மன் 2' படத்தை பரபரப்பாக இயக்கி வருகிறார். ரெஜினா கேசன்ட்ரா, யோகிபாபு, சுனில், துனியா விஜய், அபிநயா எனப் பலரும் நடித்து வரும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஆயுத பூஜையன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கடுத்தாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு இரு தினங்கள் முன்பு வெளியானது. ஏற்கனேவே `ஆம்பள', `ஆக்ஷன்', `மத கஜ ராஜா' படங்களில் இக்கூட்டணி இணைந்தது. இப்போது நான்காவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் படத்தின் ஷுட் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
விஷால் படத்தை முடித்த பிறகே, ரஜினிகாந்த் படத்தை சுந்தர் சி இயக்குவாராம். கமல்ஹாசன் தயாரிப்பில் இப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் என்ன ஜானரில் உருவாகிறது என தெரியவில்லை என்றாலும், ரசிகர்கள் பலரும் ரஜினியை வைத்து ஒரு ஜாலியான குடும்ப படம் கொடுங்கள் என கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2027 பொங்கல் ரிலீஸ்.
மேலே சொன்ன மூன்று படங்களையும் முடித்த பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம் சுந்தர் சி. எனவே பேக் டு பேக் நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்த மூன்று வருடங்களுக்கு ரசிகர்களுக்கு செம எண்டர்டெயின்மெண்ட் கேரண்டி என்பது மட்டும் இதிலிருந்து தெரிகிறது.