தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் `STR 49'. இது வடசென்னை 2ம் பாகம் இல்லை; ஆனால், வடசென்னை உலகில் நடக்கும் ஒரு கதை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உண்டாகி இருக்கிறது.
`STR 49' பட ப்ரோமோ டீசர் வெற்றிமாறனின் 50வது பிறந்தநாளான செப் 4ம் தேதி வெளியிடப்பட்டது. முழு ப்ரோமோ அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என செப்டம்பர் 26ம் தேதி அறிவித்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில் செப் 3ம் தேதி "சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க, STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைதளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும். இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்" என பதிவிட்டிருந்தார் தாணு.
எனவே முன்பு அறிவிக்கப்பட்ட படி `STR 49' ப்ரோமோ அக்டோபர் 4ம் தேதி வெளியாகவில்லை. ஒரு பக்கம் தாணு இப்படி சொன்னாலும், கரூர் துயர சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்காத இந்த சூழலில், ப்ரோமோ வெளியாவது பொருத்தமாக இருக்காது என்பதால், இதனை தள்ளி வைத்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. சிம்பு படம்தான் போஸ்ட்பாண்ட் ஆகும் என்றால், இப்போது அவர் படத்தின் ப்ரோமோ கூட தள்ளி போகிறதே என சோகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். சரி ப்ரோமோ எப்போதுதான் ரிலீஸ்? என விசாரித்தால், அனிருத்தின் பிறந்தநாள் அக்டோபர் 16ம் தேதி. எனவே அதையொட்டி அக்டோபர் 16 அல்லது 18ம் தேதி `STR 49' ப்ரோமோ வெளியாகும் என சொல்லப்படுகிறது.