Sivakarthikeyan Thaai Kizhavi
கோலிவுட் செய்திகள்

"என் வளர்ச்சியை தடுப்பது யார் என சொன்னால்..." - சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan | Seyon

அது யார் என சொல்வதால் பல யூட்யூப் சேனல்களுக்கு கூடுதலாக வியூஸ் வரும், அவ்வளவு தான்.

Johnson

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான 'தாய் கிழவி' படத்தின் முதல் காட்சியை மதுரையில் பார்த்து மகிழ்ந்தார். மதுரையை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய அவர், தனது வளர்ச்சியை தடுக்க முயற்சிப்பவர்களை பற்றி பேச மறுத்தார். சினிமாவில் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் `தாய் கிழவி'. இப்படத்தின் முதல் காட்சியை படக்குழுவினர் மதுரை கோபுரம் சினிமாஸில் பார்த்தனர். காட்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தது படக்குழு.

இதில் சிவகார்த்திகேயனிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. முதலில் படம் குறித்து பேசியவர் "இந்தப் படத்தின் முதல் ஷோ ஏன் மதுரையில் வந்து பார்த்தோம் என்றால், இந்தப் படத்தின் இயக்குநர் மதுரை மண்ணை சேர்ந்தவர். பக்கத்து தெருவில் தான் அவர் வளர்ந்ததே. அவர் இங்கே வளர்ந்த மதுரை மண்ணின் மைந்தன், நான் மதுரை மண்ணின் மாப்பிள்ளை. எனவே தான் இங்கு வந்து பார்த்தோம். சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து ரசிக்கிறார்கள். நல்ல உணர்வுகளுடன் கூடிய நல்ல விஷயங்களை சொல்லும் வாய்ப்பு இந்தப் படத்தில் அமைந்தது. இந்த மாதிரி படங்கள் மக்களிடம் போய் சேர்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. குடும்பமாக போய் படத்தை பாருங்கள்." என்றார்.

மதுரையை மையப்படுத்திய படத்தில் நடிப்பீர்களா எனக் கேட்கப்பட "அடுத்து நான் நடிக்கும் சேயோன் படம் மதுரையில் நடக்கும் கதை தான். சிவக்குமார் முருகேசன் தான் அதை இயக்குகிறார்." என்றார்.

உங்களை அரசியலில் எதிர்பார்க்கலாமா? என்றதும் "நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். படங்களில் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். நல்ல நடிகனாக நல்ல தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என இருக்கிறேன். முடிந்த அளவு நல்ல குடிமகனாக, கணவனாக, மகனாக, தந்தையாக இருந்துவிட்டால் போதும்." என்றார்.  

உங்கள் வளர்ச்சியை தடுக்கிறார்கள் என மேடையில் கூறுகிறீர்கள், அது யார் எனக் கேட்கப்பட "அது யாருன்னு தான் சொல்லுப்பா என பலர் கேட்கிறார்கள். அது யார் என சொல்வதால் பல யூட்யூப் சேனல்களுக்கு கூடுதலாக வியூஸ் வரும், அவ்வளவு தான். நான் இதை சொன்னதுக்கு காரணம் இன்னொருவரை குறை சொல்வதற்கு அல்ல, என்ன விஷயங்களை எல்லாம் நான் கடந்து வந்திருக்கிறேன் என சொல்ல மட்டுமே. இந்தக் கேள்வி வர துவங்கி இருப்பதால் இனி அதை சொல்வதை தவிர்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் இதை மேடையில் சொல்ல காரணம், என்னை பிடித்தவர்களிடம் நீங்கள் இருப்பதால் தான் என்னால் இவற்றை கடந்து வர முடிந்தது என அங்கீகரிக்க தான்."

சிவகார்த்திகேயன்

அதே சமயம் எனக்கு உறுதுணையாக இருக்கும் சினிமாவில் வழிகாட்டிகள், நண்பர்களையும் பற்றி எல்லா மேடைகளிலும் பேசி இருக்கிறேன். கமல் சார் இந்தப் படத்தை பார்த்து பாராட்டினார். ரஜினி சார் படம் பார்த்துவிட்டு படக்குழுவினர் எல்லோரிடமும் போனில் பேசினார். சூர்யா சார், ஜோதிகா மேடம் ப்ரிவ்யூவுக்கு வந்தார்கள். ரியோ, மணிகண்டன் கூட வந்து படம் பார்த்தார்கள். எனக்கு உறுதுணையாக இருப்பவர்களை நான் விட்டுக் கொடுத்ததே இல்லை" எனப் பேசினார் சிவகார்த்திகேயன்.