’சிறை’ படம் மூலம் சிறப்பான அறிமுகம் ஆனவர் L.K. அக்ஷய் குமார். அப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து, மிகப்பெரிய வெற்றியடைந்தது. இன்னும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது அவரின் இரண்டாவது பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ், மலையாளம் பைலிங்குவலாக உருவாகும் இப்படத்துக்கு `ராவடி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் L. K . அக்ஷய் குமார் உடன் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த `பராசக்தி' படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் க்ளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.