கென் கருணாஸ் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமான படம் `யூத்'. இதில் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனிஷிமா, மீனாக்ஷி எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு "யூத் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது; அதற்கு இயக்குநர் கென்னுக்கு நன்றி. லவ்யூ ப்ரோ. அவர் கதை சொல்லும் போது அவரிடம் பெரிய ஃபையர் இருந்தது. அந்த ஃபையர் தான் உங்கள் வெற்றி. இது மட்டுமல்ல இதை விட இன்னும் உயரத்துக்கு நீ போவாய். இப்போ நான் உங்களுடைய ரசிகன் ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதைவிட பெரிய புரொட்யூசர் ஆகிவிடுவார், வாழ்த்துகள் கருப்பையா பிரதர்.
என்னுடன் பணியாற்றிய நளினி மேடம், தேவதர்ஷினி மேடம் எல்லோருக்கும் நன்றி. அவருடைய நடிப்புக்கு நான் ரசிகர். படப்பிடிப்பில் எனக்கு ஏதாவது டயலாக் இருக்கும் நாளில் உங்களுடன் சரியாக பேசி இருக்க மாட்டேன். அதற்கு காரணம் எனக்கு வசனம் மறக்க கூடாது என்பதால் தான். மலையாளத்தில் படம் நடிக்கும் போது என்னடா வசனத்தை வேகமாக கொடு என கேட்பேன். இங்கு வசனம் கொடுக்கும் போது `என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா, கொஞ்சம் டைம் கொடுடா' என்பேன். அந்த டென்ஷனில் தான் நான் பேசி இருக்க மாட்டேன். மற்றபடி அவர் நடிக்கும் போதும் சாதாரணமாக பேசும் போதும் ஜாலி தான்.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஒரு பெரிய ஹீரோ போன் செய்தார். அது வேறு யாரும் இல்லை சிலம்பரசன் சார் தான். இந்தப் படத்தை மிகவும் பாராட்டி பேசினார். சிலம்பரசன் சாருக்கும், இந்தப் படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி." என்றார்.