கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார். தமிழில் இவர் ரஜினிகாந்த் நடித்த `ஜெயிலர்' படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தனுஷ் நடித்த `கேப்டன் மில்லர்' படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்தார். இப்போது ரஜினி நடிப்பில் உருவாகிவரும் `ஜெயிலர் 2' படத்திலும் நடித்துள்ளார். இப்போது புதிய தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஜய் நடிப்பில் உருவாகிய `ஜனநாயகன்' படத்தில் நடிக்கவும் சிவராஜ்குமாரை அணுகினார்கள். அப்போது அவரது உடல்நிலை காரணமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். மேலும் `ஈட்டி', `ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ்குமார் ஒரு படத்தில் நடிப்பதற்காக பல காலம் பேச்சு வார்த்தை நடந்து துவங்கும் சூழலில் இருந்தது. ஆனால் அப்போதுதான் சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்தப் படத்திலிருந்து விலகினார் சிவராஜ்குமார்.
இப்போது சிகிச்சை முடிந்து மிகவும் ஆரோக்யமாக திரும்பி வந்த சிவராஜ்குமார், அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்து வருகிறார். அப்படி இப்போது ஒரு தமிழ் படத்தை கமிட் செய்துள்ளார். `எங்கேயும் எப்போதும்', `இவன் வேற மாதிரி' போன்ற படங்களை இயக்கிய எம் சரவணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவராஜ்குமார். சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என அறிவித்துள்ளனர்.