தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கர். சமீபகாலமாக இவர் இயக்கும் படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. 2024ல் வெளியான `இந்தியன் 2', 2025ல் வெளியான `கேம் சேஞ்சர்' என இரு படங்களுமே அதிக நெகடிவ் விமர்சனங்களை பெற்றன. அடுத்ததாக ஷங்கர் என்ன படம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அமைதியாக இருக்கிறார் ஷங்கர்.
சில வருடங்கள் முன்பு சு வெங்கடேசன் எழுதிய `வேள்பாரி' நாவல் தன்னை கவர்ந்தது எனவும், அதனை படமாக மாற்றும் வேலைகளில் இருக்கிறேன் எனவும் கூறியிருந்தார் ஷங்கர். அதன் பின்னர் அதற்கான திரைக்கதை முழுவதுமாக முடிந்துவிட்டது எனவும் கூறினார். தற்போது வேள்பாரி படத்தை இயக்கும் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார் ஷங்கர்.
மும்பையை சேர்ந்த பென் மீடியா மூலம் இந்தப் படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஷங்கர் தனது `அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்கை ரன்வீர் சிங் வைத்து இயக்குவதாக இருந்தது, ஆனால் தமிழில் இப்படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரைட்ஸ் விஷயத்தில் கறாராக இருக்க அது நடக்காமல் போனது. அந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது இதே பென் மீடியா தான்.
இப்போது இந்த பென் மீடியா தான், `வேள்பாரி'யை தயாரிக்க முன்வந்திருக்கிறது. ஆனால் இதில் தயாரிப்பு நிறுவனம் போட்டிருக்கும் ஒரு கண்டிஷன் என்ன என்றால், எத்தனை நாள் படப்பிடிப்பு, எவ்வளவு செலவாகும் என்பதை தெளிவான ஒரு ரிப்போர்ட் போல முன்னரே கொடுக்க வேண்டும். அந்த பட்ஜெட்டை தயார் செய்யும் வேலையில் தான் இருக்கிறார் ஷங்கர். இதில் விக்ரம் மற்றும் ரன்வீர் சிங் நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.