தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து நிபுணரான இவர் திமுக கட்சியில் இணைந்தார். மேலும் திமுக ஐடி விங்கில் பொறுப்பிலும் இருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்திருந்த ஒரு பேட்டியில் தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை, திருமணத்துக்காக செய்யப்படும் சடங்குகளிலும் உடன்பாடு இல்லை எனப் பேசி இருந்தார். இந்தக் கருத்துக்கு ஆதரவு கிடைத்தாலும், பல எதிர்கருத்துகளும் எழுந்தன.
இந்த நிலையில் தன் மகளின் கருத்துக்கு ஆதரவு குரலை வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார் நடிகர் சத்யராஜ். அந்த வீடியோவில் "திருமணத்தை பற்றியும், சாதி, மத சடங்குகளை பற்றியும் என்னுடைய மகள் (திவ்யா) ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதை பற்றி ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். என்னிடம் அது பற்றி கருத்து கேட்டனர். நான் பெருமைமிகு பெரியாரிஸ்ட். எனக்கு இந்த சாதி, மத, சடங்கு போன்றவற்றில் உடன்பாடு இல்லை.
அதேபோல திருமணம் குறித்தும் என்னிடம் கேட்டார்கள். திருமணம் என்பது ஒரு கட்டாயமல்ல. அது தனிநபர் விருப்பம் சார்ந்த விஷயம். திருமணம் செய்வதோ, சரிவரவில்லை என விவாகரத்து செய்வது, தனியாகவே வாழ முடிவு செய்வது அல்லது திருமணம் இல்லாமலேயே ஒரு குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டாலும் கூட இன்று இருக்கும் மருத்துவ முன்னேற்றங்களின் படி அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இவை அனைத்தும் ஒரு தனிநபரின் விருப்பம் சார்ந்தது என்பது தான் என்னுடைய கருத்து. எனவே, இந்த கருத்துக்களில் திவ்யாவுடன் நானும் ஆதரவாக இருக்கிறேன்; உடன்படுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பேசியுள்ளார் சத்யராஜ்.