முனீஷ்காந்த், விஜயலக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் `மிடில் கிளாஸ்'. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணியாற்றிய பிரணவ் முனிராஜ்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சந்தோஷ் நாராயணன் பேசிய போது "விட்டி ஸ்டோர் என்ற ஒரு கடை இருக்கிறது. அங்கு நான் அமர்ந்து வருவோர் போவோரை கலாய்த்துக் கொண்டிருப்பேன். அப்போது இவன் (பிரணவ் முனிராஜ்) காலேஜ் படித்துக் கொண்டிருந்த சமயம். அந்த கடையில் நெய் வாங்க வந்திருந்தான். அப்போது என்னிடம் வந்து நான் உங்களிடம் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என சொன்னான். நான் தயாராக இல்லை என சொல்லி அனுப்பிவிட்டேன். அதற்கு 3 வருடங்கள் கழித்து, திரும்ப அதே கடையில் சந்தித்தோம். என்னடா இப்போது தயாராகி விட்டாயா? என்று கேட்டேன். அண்ணா அப்போது நான் அப்படி பேசி இருக்க கூடாது, முட்டாள்தனம் செய்துவிட்டேன் என சொன்னான். அதன் பிறகு இவனுடைய அம்மா வந்தார். பையன் ரொம்ப நல்லவன், யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டான். அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றார். இதற்காக எல்லாம் வாய்ப்பு கொடுக்க முடியாது மேடம் என்றேன்.
அதன் பிறகு இவன் இசையமைத்த சில பாடல்களை கொடுத்தான். அதைக் கேட்டுப்பார்த்தால் பயங்கரமாக இருந்தது. அதன் பிறகு என் மேனேஜரிடம் சொல்லி போன் செய்ய சொன்னேன். என்னுடன் இணைந்து பணியாற்றுகிறாயா எனக் கேட்டேன். `கர்ணன்' படத்தில் தான் வந்து சேர்ந்தான். `பாரிஸ் ஜெயராஜ்', `கல்கி', `வாழை', `ரெட்ரோ' என எல்லாப்படத்திலும் பணியாற்றினார். ஆனால் எல்லாம் ஒரே எழுத்துப்பிழையாக இருக்கும், ஃபைல் பெயரையே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இசையில் அசத்துவான். கர்ணன் காவல்நிலைய காட்சி, இடைவேளை, கல்கியில் வீரா தீம் என பலவற்றை செய்தான். என்னுடைய சில உதவியாளர்கள்தான் இசை தயாரிப்பார்கள். அப்படி இணைந்து பணியாற்றுவதில் நிறைய செய்தது பிரணவ் தான்.
இப்போது இந்தப் படம் பற்றி சொல்கிறேன். எனக்கு டில்லி பாபு சார் கால் செய்தார். அப்போது அவரை எனக்கு தெரியாது. என்னிடம் திபு நினன் தாமஸ் பணியாற்றினார். அவர் பற்றி விசாரித்தார். நான் திபுவை புகழ்ந்து கூறினேன். அவருக்கு முதல் படமாக மரகதநாணயம் அமைந்தது. அதன் பிறகு நான் அவரிடம் பேசவில்லை. ஆனால் அது எப்படி அமைகிறது என தெரியவில்லை. என் உலகத்தில் இருக்கும் திறமைகளை மேடையில் ஏற்றுகிறார்கள். விஜயலக்ஷ்மி, முனீஸ்காந்த் என பலரும் நிறைய ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற மேடை கிடைப்பதில் மகிழ்ச்சி. டில்லி பாபுவின் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரது பணியை எடுத்து செய்யும் துரை - தேவுக்கு வாழ்த்துகள்" என்றார்.