Santhosh Narayanan  Ed Sheeran, Dhee, HanumanKind
கோலிவுட் செய்திகள்

எட் ஷீரன் + ஹனுமான் கைண்ட் + தீ... மிரட்டல் கூட்டணியுடன் SaNa!

எட் ஷீரன் தொடர்ந்து இந்திய கலைஞர்களுடனான இணைந்து பணியாற்றுபவர். சென்னையில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் ' ஊர்வசி ஊர்வசி ' பாடலையும் ஷீரன் 'ஷேப் ஆஃப் யூ' பாடலை மிக்ஸ் செய்து பாடினார்கள்.

Johnson

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். திரை இசை பாடல்கள் தாண்டி தனி இசை பாடல்களை உருவாக்குவதிலும் தீவிரமாக பணியாற்றி வருபவர் சந்தோஷ். இவர் புதிய பாடல் ஒன்றுக்காக சர்வதேச கூட்டணி ஒன்றை அறிவித்துள்ளார்.

உலகம் முழுக்க பிரபலமான ஆங்கில இசைக்கலைஞர் எட் ஷீரன் (Ed Sheeran), கேரளா ராப் பாடகர் ஹனுமான்கைண்ட் (Hanumankind) மற்றும் தீ ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய பாடலை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இதற்கு முன்பு ' நீயே ஒலி ' மற்றும் ' எஞ்சாய் எஞ்சாமி ' போன்ற சுயாதீன பாடல்களை உருவாக்கியுள்ளார் சந்தோஷ்.

தீ, சந்தோஷ் இசையமைத்த 'எஞ்சாய் எஞ்சாமி', 'மாமதுர', ' சம்கீலா அங்கிலேசி' மற்றும் 'ஏ சண்டகரா ' உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் `தக் லைஃப்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ' முத்த மழை ' பாடலை பாடியிருந்தார். ஹனுமான்கைண்ட் தனது 'Big Dawgs' என்ற தனிப்பாடலின் மூலம் உலகளவில் கவனம் பெற்றார், அதன் மூலம் Travis Scott போன்ற சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து சர்வதேச அளவில் இந்தப் பாடலை பாட வழிவகுத்தது. மேலும் ஆஷிக் அபுவின் ரைபிள் கிளப் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

எட் ஷீரன் தொடர்ந்து இந்திய கலைஞர்களுடனான இணைந்து பணியாற்றுபவர். 'Sapphire' பாடலில் பாலிவுட் பாடகர் அரிஜித் சிங்குடன் இணைந்து பணியாற்றினார். சென்னையில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் ' ஊர்வசி ஊர்வசி ' பாடலையும் ஷீரன் 'ஷேப் ஆஃப் யூ' பாடலை மிக்ஸ் செய்து பாடினார்கள். தற்போது இந்த மூவரும் சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்து Don't என்ற பாடலை பாடியுள்ளனர். இது இசை ரசிகர்கள் மத்தியில் பெரிய பேசுபொருளாகி உள்ளது.