Santhosh Narayanan, Arivu Enjoy Enjaami
கோலிவுட் செய்திகள்

உழைப்பிற்கு ஊதியம், உரிமை இல்லை VS உன் வாதங்கள் நேர்மையற்றவை... மீண்டும் Enjoy Enjaami சர்ச்சை!

அந்தப் பாடலில் என்னுடன் பணியாற்றியவர்கள் அதன் உரிமைகளை வைத்துக்கொண்டு ராயல்டி பெறுகிறார்கள். ஆனால், எனது உழைப்பிற்கு எனக்கு எந்த ஊதியமோ அல்லது பாடல் மீதான உரிமையோ வழங்கப்படவில்லை.

Johnson

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி 2021ல் வெளியான பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. இப்பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்து பல பாராட்டுகளை பெற்றது. மேலும் அதை ஒட்டி பல சர்ச்சைகளும் வெடித்தது. இப்பாடலில் பாடகர் மற்றும் பாடலாசிரியர் அறிவின் பங்களிப்புக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பிரச்சனை எழுப்பப்பட்டது. ஆனால், பின்னர் இந்த பிரச்னை சில நாட்களிலேயே அடங்கியது.

இந்தப் பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் இது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. இதன் துவக்கப்புள்ளி, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவர் என்ஜாயி எஞ்சாமி பாடலின் வீடியோ துண்டை ஒருவர் பகிர்ந்து, `ஒரு தனியிசை பாடல் பல ரெக்கார்டுகளை உடைத்து, உலகளவில் அதுவும் லாக்டவுன் சமயத்தில் பிரபலமானது' எனக் குறிப்பிட்டிருந்தார். அதனை இன்னொரு பயனர் பகிர்ந்து `இந்தப் பாடலை அறிவிடம் இருந்து திருடிவிட்டனர்' எனப் பதிவிட்டார்.

அந்த பதிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் "கொஞ்சம் ஓய்வு எடுங்க தம்பி. நீங்கள் தேடினால் சில பயனுள்ள தகவல்கள் ஏற்கனவே எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. இந்தப் பாடலின் யோசனை தீயால் உருவாக்கப்பட்டது. மேலும் அதில் அவரது சில மெட்டுக்களும் உள்ளன. இந்தப் பாடலின் மையக் கதைக்களம் மற்றும் கருத்தை இயக்குநர் மணிகண்டன் உருவாக்கினார். அவர் அப்போது என்னுடன் கடைசி விவசாயியில் பணிபுரிந்தார். நான் பாடலில் உள்ள அனைத்து மெல்லிசைகளையும் இசையமைத்து, தயாரித்து, உருவாக்கினேன். அறிவு கிட்டத்தட்ட அனைத்து வார்த்தைகளையும் எழுதி, பாடினார். சில பாரம்பரிய ஒப்பாரி வரிகளும் அறிவால் தழுவி எடுக்கப்பட்டன. ரகிட, கனிமா போன்ற எனது பெரும்பாலான பாடல்களுக்கு நான் எப்போதும் பரிந்துரைப்பது போல் எஞ்சாமி என்ற வார்த்தையை மட்டுமே பரிந்துரைத்தேன். அதிர்ஷ்டவசமாக நாம் ஒரு டிஜிட்டல் களத்தில் வாழ்கிறோம், ஒவ்வொரு கூற்றையும் நிரூபிக்க முடியும் மற்றும் நிரூபிக்கப்பட வேண்டும்." என்று பதிலளித்தார்.

இதற்கு தன் தரப்பை விளக்கும் விதமாக பாடகர் அறிவு "அந்தப் பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய சொந்த பண்பாட்டு வரலாறு மற்றும் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில், நானே அந்தப் பாடலின் வரிகளை எழுதி, அதன் முதன்மை மெட்டையும் அமைத்துப் பாடினேன். இசை என்பது ஒரு கூட்டு முயற்சிதான். ஆனால், அதற்கான அங்கீகாரமும் ஊதியமும் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். இந்தப் பாடல் எனது கிராமத்தில், எனது மண்ணின் மற்றும் மக்களின் கதைகளைக் கொண்டு படமாக்கப்பட்டது. அந்த வரலாறு மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில்தான் நான் அதைப் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அந்தப் பாடலை முழுமையாக எழுதியும், அதன் முதன்மை மெட்டை அமைத்திருந்தும் கூட, நான் ஒரு 'featuring artist' ஆக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டேன்.

அப்போது அதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பாடலில் என்னுடன் பணியாற்றியவர்கள் அதன் உரிமைகளை வைத்துக்கொண்டு ராயல்டி பெறுகிறார்கள். ஆனால், எனது உழைப்பிற்கு எனக்கு எந்த ஊதியமோ அல்லது பாடல் மீதான உரிமையோ வழங்கப்படவில்லை. இது அனுதாபத்திற்கான கோரிக்கை அல்ல. இது அங்கீகாரம், உரிமைகள் மற்றும் உழைப்பின் கண்ணியம் சார்ந்த கோரிக்கை. சுயாதீன கலைஞர்களே உங்கள் படைப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். முறையான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுங்கள். உங்கள் உரிமைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று பதிவிட்டார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மீண்டும் இதற்கு பதில் அளிக்கும்படி " உங்களுக்கு உங்கள் சொந்தக் கருத்துகள் இருக்கலாம் நண்பரே. ஆனால் தொழில்நுட்பம் மற்றும் சட்ட ரீதியாக நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் எல்லாமே வழக்கம்போல நேர்மையற்றவை மற்றும் வெறும் கற்பனைதான். உங்கள் வாதங்களுக்கான அனைத்து ஆதாரங்களுடனும் நீங்கள் விரும்பும் எந்த ஊடகம்/சேனலிலும் இதைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறீர்களா?? நீங்கள் மற்ற எல்லா இடங்களிலும் தடுத்துள்ளதால் (blocked), நீங்கள் இங்கே பதிலளிக்கலாம், நான் எந்த நேரத்திலும் தயாராக இருப்பேன்." என்ற பதிவை முன்வைக்க, அதற்கு பதில் சொன்ன அறிவு, "அங்கீகாரம், உரிமை மற்றும் இழப்பீடு குறித்த எனது அறிக்கை ஏற்கனவே பகிரங்கமாக உள்ளது. நான் பலமுறை தனிப்பட்ட முறையில் இதைத் தீர்க்க முயற்சித்தேன் - உங்கள் வீட்டிற்குச் சென்றபோதும் கூட. அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இது சமூக ஊடக விவாதம் அல்ல. உண்மைகள் தாங்களாகவே பேசுகின்றன. பொருத்தமான சேனல்கள் உள்ளன." என்றார்.

மீண்டும் இதற்கு பதில் சொன்ன சந்தோஷ் நாராயணன் "ஆமாம், நீங்கள் இதை அப்பட்டமான பொய்களால் ஒன்றாக மாற்றும் வரை இது ஒருபோதும் சமூக ஊடகப் பேசு பொருளாக இருக்கக்கூடாது. நீங்கள் இதைத் தீர்க்க முயற்சித்ததாகக் கூறுவது மீண்டும் ஒரு அழகான ஏமாற்று வேலை. நான் அமைதியாக இருக்க வேண்டிய அந்த கடினமான காலங்களில் நீங்கள் ஒரு முறை கூட பதிலளிக்கவில்லை. மேலும் கடந்த வருடம் உங்கள் திருமணத்திற்கு என்னை அழைக்க நீங்கள் ஒரு முறை வீட்டிற்கு வந்தீர்கள் (நான் வெளிநாட்டில் இருந்தேன், என் ஊழியர்கள் பின்னர் என்னிடம் சொன்னார்கள்). நீங்கள் என்னைத் தடுத்து அதைப் பற்றி ஒரு பாடலை உருவாக்கிய பிறகு இது நடந்தது. அன்பாக தான் பேசுவேன், இதை விவாதிப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்." என பதிலளித்தார். இவர்களின் இந்த வார்த்தை போர் இன்று பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக மாறியுள்ளது.