`ஜோ' படத்தில் பெரிய வரவேற்பை பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தின் மூலம் கலையரசன் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு, ஒரு உலக சாதனையை புரிந்துள்ளதாக கூறுகிறது படக்குழு.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு கடந்த வியாழன் (அக்டோபர் 16) அன்று ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து `ஆண் பாவம் பொல்லாதது' பட டிரெய்லரை பகிர்ந்தனர். இதன் மூலம், உலகிலேயே ஒரே நேரத்தில் அதிகபட்ச நபர்களால் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது `ஆண் பாவம் பொல்லாதது' படம்.
இது பற்றி பகிர்ந்து கொண்ட படத்தின் ஹீரோ ரியோ ராஜ் “இது எனது ஊர். நான் வளர்ந்த ஊரில் இவ்வளவு பிரம்மாண்டமாய் என் படத்தின் ஒரு நிகழ்வு நடந்தேறும் என ஒரு போதும் நான் எண்ணியதில்லை, ஆனால் அதற்காக உழைத்துக்கொண்டேதான் இருந்திருக்கிறேன்" எனப் பேசி இருக்கிறார். இப்படம் அக்டோபர் 31 முதல் உலகெங்கிலும் வெளியாகிறது.