’கண்ட நாள் முதல்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய `விடாமுயற்சி' படத்தில் வில்லி ரோலில் நடித்திருந்தார் ரெஜினா. இப்படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் ஒரு விருது விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில் அஜித் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
ரெஜினா பேசியபோது, "அஜித் சாருடன் நடிக்கப் போகும்போது அவரிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது என எனக்குத் தெரியவில்லை. நிறைய பேர் அவரைப் பற்றிச் பேசி இருக்கிறார்கள். ஆனால் அவருடன் பணியாற்றும் கலைஞர்களை மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் நடந்துகொள்வார், குறிப்பாக பெண்களுக்கு. ஒரு பெண்ணாக இந்த துறையில் எனக்கு அது நல்ல உணர்வைக் கொடுத்தது.
முதல் முறை இந்தப் படப்பிடிப்புக்குப் போனபோது, Bakuவில் படமாக்கினோம். அது டிசம்பர் மாதம் மிகவும் குளிராக இருந்தது. அஜித் சார் அவராக வந்து, `நேற்று எல்லோருக்கும் மட்டன் செய்து கொடுத்தேன், இன்று மதிய உணவு உங்களுக்கு என்ன வேண்டும்?' எனக் கேட்டார்.
இணைந்து பணியாற்ற மிகச் சிறப்பான மனிதர் அஜித். ஏனெனில், நீங்கள் வந்து அவரிடம் பேச வேண்டும் எனக் காத்திருக்க மாட்டார், அவராக வந்து உங்களிடம் பேசி சகஜமாக்குவார். அப்படியான உச்ச நடிகர் அதைச் செய்வது சாதாரண விஷயமில்லை" என்றார்.