Rathnakumar AA23
கோலிவுட் செய்திகள்

"அல்லு அர்ஜூன் பட வேலைகள் வெறித்தனமாக போகின்றன” - ரத்னகுமார் | Rathnakumar | Allu Arjun

அல்லு அர்ஜூன் - லோகேஷ் படத்தில் நானும் ஒரு பாகமாக, எழுத்துப் பணி செய்கிறேன். அவருடன் ஒருமுறை போனில் பேசியதே மிக உற்சாகமாக இருந்தது.

Johnson

’மேயாத மான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். தொடர்ந்து அமலா பால் நடித்த `ஆடை', சந்தானம் நடித்த `குலு குலு' போன்ற படங்களை இயக்கினார். தற்போது விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள '29' படத்தை இயக்கியுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த `மாஸ்டர்', `லியோ', கமல் நடித்த `விக்ரம்', ரஜினி நடித்த `கூலி' மற்றும் இன்னும் சில படங்களிலும் கதையில் பணியாற்றியுள்ளார்.

இவரின்  '29' படம் மே 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் அடுத்தாக லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் AA23 படத்தின் கதையில் பணியாற்றுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ரத்னகுமார், "அல்லு அர்ஜூன் - லோகேஷ் படத்தில் நானும் ஒரு பாகமாக, எழுத்துப் பணி செய்கிறேன். அவருடன் ஒருமுறை போனில் பேசியதே மிக உற்சாகமாக இருந்தது. சரியான பேன் இந்திய படம் இதுதான் எனத் தோன்றுகிறது. அது படத்தின் நடிகர்களாலோ, கதை நிகழும் நிலம் சார்ந்தோ அல்ல. கதையாகவே ஒரு சர்வதேச தன்மையுடன் இருக்கிறது. 

அல்லு அர்ஜூன் சார் நடிக்கும்போது கூடுதலாக ஒன்று நடக்கும். இது சார்ந்த வேலைகள் வெறித்தனமாக போகின்றன. ஏற்கெனவே ஒரு மூன்று வாரங்கள் அந்தப் பட வேலைகளுக்காக போய் வந்தோம். இந்தப் படம் வெளியான பின்னர், மே இரண்டாவது வாரத்திலிருந்து அந்தப் பட வேலைகளுக்கு சென்றுவிடுவோம்" என்றார்.