வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படம் `அரசன்'. வடசென்னை உலகில் நடக்கும்படியான கதையாக இப்படம் உருவாகிறது என முன்பே வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார். வடசென்னை படத்தில் நிஜத்தில் நடந்த பல அரசியல் தருணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். எம் ஜி ஆர் மறைவு, ஜெயலலிதாவின் வளர்ச்சி, ராஜீவ் காந்தி கொலை எனப் பல விஷயங்களை படத்தில் நேர்த்தியாக சேர்த்திருப்பார் வெற்றிமாறன்.
இதில் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வை முன்வைத்து சமீபகாலமாக `அரசன்' படத்தின் டைம்லைன் சம்பந்தமாக சில ஃபேன் தியரி இணையத்தில் உலவுகின்றன.
அரசன் பட புரோமோவில் மூன்று பேரை கொலை செய்தார் என்ற குற்றம் சிம்பு மேல் சாட்டப்பட்டிருக்கும். ஆனால் அவர் தான் கொலை நடந்த இரவு நண்பர்களுடன் `கேப்டன் பிரபாகரன்' படத்துக்கு சென்றதாகவும், ஊரிலேயே இல்லை என்றும் சொல்வார். இதை வைத்துதான் இப்போது சில தியரி எழுந்திருக்கிறது.
கேப்டன் பிரபாகரன் வெளியாகி (14 April 1991) சில மாதங்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை (21 May 1991) நடந்தது. இந்த சம்பவம் தான் வடசென்னை + அரசன் இரு படங்களையும் இணைக்கும் புள்ளி. ப்ரோமோவை மையமாக எடுத்துக் கொண்டால் சிம்பு பாத்திரத்தின் இளமை காலத்தில் நடைபெற்ற கொலைதான் இப்போது விசாரிக்கப்படுகிறது. அதாவது 1991ம் ஆண்டு, கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு. அது எப்படி உறுதியாக ஒரு மாதம் என்பதை அடுத்து சொல்கிறேன்.
ராஜீவ் காந்தி கொலைக்கும் வடசென்னை படத்துக்கும் உள்ள தொடர்பு நமக்கு நினைவில் இருக்கும். அன்பு (தனுஷ்) இளைமை காலத்தில் ஒரு கேரம் போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருப்பார். அப்போதுதான் ராஜீவ் காந்தி கொலை நடந்திருக்கும். உடனே அங்கு இருக்கும் நபர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் தனுஷ் மற்றும் அவரது குழுவை அங்கிருந்து அப்புறப்படுத்துவார்கள்.
ராஜீவ் காந்தி கொலை வடசென்னை கதையில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும். எப்படி?
ராஜீவ் காந்தி கொலை அறிவிப்பானதும், அன்று இரவு அன்பு ஏரியாவில் கலவரங்கள் நடக்கும், அங்குள்ள மின்சாதன பொருட்கள் விற்கும் கடையில் ஏரியா மக்கள் திருடுவார்கள். அப்போதுதான் பத்மாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) முதன் முறை சந்திப்பார் அன்பு. ஒருவேளை ராஜீவ் கொலை நடக்கவில்லை என்றால் வடசென்னை கதை மாறி இருக்கும். ஏரியா மக்கள் அந்தக் கடையில் திருட கூடி இருக்க மாட்டார்கள், அன்பு - பத்மா காதல் ஏற்பட்டிருக்காது, ஜாவா பழனி (சாய் தீனா) பத்மாவை கிண்டல் செய்ததற்கு அன்பு அவரை கொலை செய்திருக்கமாட்டார், சிறையிலிருக்கும் செந்திலை (கிஷோர்) கொலை செய்ய அன்புவை அனுப்பி இருக்கமாட்டார் குணா (சமுத்திரக்கனி). இப்படி இந்த சங்கிலி விளைவுகள் எல்லாவற்றுக்கும் ஆரம்பப்புள்ளி, வடசென்னை உலகை பொறுத்தவரை ராஜீவ் காந்தி கொலை தான்.
இப்போது அரசன் + ராஜீவ் காந்தி கொலை கனெக்ஷனை பார்க்கலாம். அரசன் ப்ரோமோவில் சிம்பு கொலை செய்துவிட்டு உடல் முழுக்க ரத்தத்துடன் நடந்து செல்வார். அப்போது அவரின் வலது பக்கம் உள்ள சுவற்றில் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் சிவராசன் மற்றும் தாணு ஆகியோரை போன்ற புகைப்படங்கள் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டு, அவர்களை பற்றி தகவல் கொடுத்தால் சன்மானம் என எழுதப்பட்டிருக்கும்.
மேலும் `அரசன்' படத்தின் கதை மயிலை சிவகுமாரை மையப்படுத்தி உருவாகிறது என சிலர் சொல்லி வருகிறார்கள். ஆனால் இந்த புரமோவின் படி பார்த்தால் சிம்பு பாத்திரம் கொலை செய்யும் வருடம் 1991. மயிலை சிவா தன் முதல் கொலையாக தோட்டம் சேகரை கொன்றது 1996. எனவே அரசன் கதை மயிலை சிவாவை வைப்படுத்தியதாக இருக்காது என எடுத்துக் கொள்ளலாம்.
வடசென்னையில் காட்டப்பட்டிருக்கும் ஒரு காட்சி இந்த மூவர் கொலை நடந்தற்கு அடுத்த நாளை போல வடிவமைக்கப்பட்டிருக்கும். பத்மா அவரது தந்தையுடன் ஸ்கூட்டரில் வரும் போது அன்பு குறுக்கே விழும் காட்சி முடிந்ததும், ஃபங்க் முடி வைத்திருப்பவர்களை எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வார்கள்.
அரசனில் சிம்பு கொலை செய்யும் போது இருக்கும் கெட்டப் ஃபங்க் தலையுடனேயே இருக்கும். எனவே கொலையாளியின் அடையாளத்தை வைத்து அவரை தேடும் பணிகளில் ஃபங்க் வைத்திருக்கும் அனைவரையும் போலீஸ் விசாரிக்கிறார்கள் என்ற கனெக்ட் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
எனவே இந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்துவது என்றால், கேப்டன் பிரபாகரன் ரிலீஸ், ராஜீவ் காந்தி கொலை, அன்பு - பத்மா சந்திப்பு, அரசன் படத்தில் மூவரின் கொலை, அதன் பின் அன்புவின் ஃபங்க் தலை என சொல்லலாம். இந்த அனுமானங்கள், தியரி எல்லாம் உண்மை தானா என்பது `அரசன்' படம் வந்த பின்பே தெரியும். பொறுத்திருந்து பார்க்கலாம்.