Rajinikanth Ravi Shankar
கோலிவுட் செய்திகள்

"என் ஆணவத்தை உடைத்துவிட்டார்கள்.." ரஜினி சொன்ன சம்பவம் | Rajinikanth

நான், அங்கு வருபவர்கள் புகைப்படம் கேட்டு, அது இவருக்கு தொந்தரவாக இருக்குமோ என தயங்கினேன்.

Johnson

நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் நடைபெற்ற ஆன்மிகத் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் ஆசிரமத்தின் 45-ஆவது ஆண்டு விழா நிகழ்வில் நேற்று கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த், முதன்முறை The Art of Living International Centre சென்ற அனுபவத்தைப் பற்றியும், ஆன்மிகம் பற்றிய குட்டிக் கதை ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். இதில் பேசிய ரஜினி, "நான் மூன்று வருடங்களுக்கு முன்புவரை குருதேவ் அவர்களை போட்டோக்களிலும், வீடியோக்களிலும்தான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை பெங்களூருவில் இருந்து சென்னைக்குச் செல்ல விமானநிலையத்தில் காத்திருந்தபோது, அங்கிருந்த அனைவரிடமும் ஒரு சலசலப்பு. பிரதமர்போல பெரிய நபர் யாரோ வருகிறார்கள்போல என நினைத்தேன். அங்கு குருதேவ் நின்று கொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்து பேசினார். அவர் பேசியபோது, முகம் முழுக்க பெரிய மகிழ்ச்சி. மிக ஏழ்மையான ஒரு மனிதனுக்கு 50 கோடி ரூபாய் பணம் லாட்டரியில் கிடைத்ததுபோல ஒரு மகிழ்ச்சி. அப்போது அவர் ஆசிரமத்துக்கு நேரம் கிடைக்கையில் வரச் சொன்னார்.

Rajinikanth

நான் இரண்டு நாட்கள் இருக்கலாம் என அங்குச் சென்றேன். அது மிகவும் அழகான ஆசிரமம். அங்கிருந்த மக்கள் முகத்தில் எல்லாம் மகிழ்ச்சி. மனிதர்கள் மட்டுமல்ல யானை, மாடுகள், குதிரைகள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருந்தன. அங்கு இரண்டு குதிரைகள் இருந்தன. ஒன்றின் பெயர் ரஜினி. இமயமலைக்குப் பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இந்த ஆசிரமம்தான். இரண்டு நாட்கள் எனத் திட்டமிட்டவன், 15 நாட்கள் தங்கினேன். அப்படி இங்கு தங்கிருந்த ஒருநாள் ஏதோ விஷேச தினம். குருதேவ் அவர்கள் தன் பக்தர்களை பார்க்கச் செல்லப் போனபோது என்னையும் உடன் வர அழைத்தார். அங்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக் கேட்டு, அது இவருக்கு தொந்தரவாக இருக்குமோ என நான் தயங்கினேன். அவர், ’அப்படி எல்லாம் நடக்காது’ என அழைத்துச் சென்றார். போட்டோ, ஆட்டோகிராஃப் என்பதை எல்லாம் விடுங்கள், அவர்கள் யாரும் என்னை பார்க்க கூட இல்லை. நான் கைகாட்டி ’ஹாய்’ சொன்னால்கூட ஒருவரும் என்னைப் பார்க்கவில்லை. அவர்கள் என்னுடைய ஆணவத்தை உடைத்துவிட்டார்கள்” என்றவர் தொடர்ந்து கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

”ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு வலதுகரமாக மிகத் திறமையான, அறிவாளியான ஒரு மந்திரி இருந்தாராம். அவர் இல்லாமல் ராஜா எதுவுமே செய்யமாட்டார். ஒருநாள் மந்திரி, ராஜாவிடம் வந்து என்னைப் பணியிலிருந்து நீக்கிவிடுங்கள், நான் இமயமலைக்குச் சென்று துறவியாகப் போகிறேன் என்றாராம். ’உனக்கென்ன பைத்தியமா? எதைச் செய்வதானாலும் இங்கேயே செய்’ என ராஜா கூறியபோதும், மந்திரி மறுத்துவிடுகிறார். ராஜாவும் அந்த மந்திரியை அனுப்பிவிடுகிறார். ஆனால் மந்திரி இல்லாமல் ராஜாவால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஐந்து ஆண்டுகள் கழித்து அந்த துறவியாக மாறிய மந்திரி திரும்ப ராஜாவின் நகரத்துக்கு வருகிறார்.

Rajinikanth

அதைக் கேள்விப்பட்ட ராஜா, அவரை அழைத்து வரக் கூறுகிறார். ’அவர் வரமாட்டார், நாம்தான் அவரிடம் போக வேண்டும்’ என ராஜாவிடம் சொல்கிறார்கள். ராஜாவும் அவரைப் பார்க்கப் போகிறார். ஒரு சிறிய குடிசையில் தரைவிரிப்பும் மண்பானையும் மட்டும் வைத்துக் கொண்டு இருக்கும் தன முன்னாள் மந்திரியான துறவியைப் பார்க்கிறார் ராஜா. ’என்ன ஒரு முட்டாள்தனம், இதற்கு தான் எல்லாவற்றையும் துறந்துவிட்டு போனாயா’ எனக் கேட்கிறார் ராஜா. அதற்கு அவர், ’நான் மந்திரியாக இருந்தபோது ராஜாவான உங்கள் முன்னால் நின்றேன். இப்போது ராஜா நீங்கள் என்முன் நிற்கிறீர்கள். அதுதான் ஆன்மிகத்தின் சக்தி" என்றார்.