சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இது சினிமாவில் 50வது ஆண்டு. இவரின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), வரும் நவ.20 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இந்த நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, நடிகர் ரஜினிக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குருதத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதே நிகழ்வில் விது வினோத் சோப்ரா, ஆமீர்கான், அனுபம் கெர், ரவி வர்மன், ஸ்ரீகர் பிரசாத் உட்பட பலர் நடத்தும் 21 சினிமா தொடர்பான வகுப்புகள் நடக்க உள்ளது.
மேலும் இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படமும் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.