ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் இந்திய சினிமாவில் பலரும் எதிர்பார்க்கும் ஒன்று. விருது விழா ஒன்றில் கமல்ஹாசன், ரஜினியுடன் இணைவதை உறுதி செய்தார். அதே போல விமான நிலையத்தில் ரஜினிகாந்தும் "ராஜ்கமல் + ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். இருவரும் இணைந்து நடிக்க ஆசை. அதற்கான கதை அமைய வேண்டும். இயக்குநர் முடிவாகவில்லை" என சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
தற்போது ஒரு விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவரிடமும் இப்படம் பற்றி அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ருதி, "உங்களைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம்" என்றார்.
இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறும் போது "இதனை எங்கள் அப்பாக்கள் (ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்) உங்களுக்குச் சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆனால் அப்பா (ரஜினிகாந்த்) கமல் மாமாவின் பேனரில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதன் மற்ற விவரங்களை சொல்லவேண்டிய நேரத்துல தலைவர் சரியா சொல்லுவார்" என்று தெரிவித்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்த ரஜினி - கமல், கடைசியாக ஐ.வி. சசியின் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தில் இணைந்து நடித்தனர். இந்தக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.