தமிழ் திரையுலகின் முதன்மை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் படம் உருவாகிறது. தமிழில் 1981ல் `தில்லு முல்லு', இந்தியில் 1985ல் வெளியான `Geraftaar' படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்தினர்.
இப்படத்தை பற்றி ரஜினியும், கமலும் பல இடங்களில் உறுதி செய்திருந்தனர். `ஜெயிலர் 2' படப்பிடிப்பு சமயத்தில் தானும் - கமல் இணையும் படத்திற்கு நெல்சனிடம் கதை கேட்டிருக்கிறார் ரஜினி. அவர் சொன்ன கதை பிடித்துவிட, அதையே லாக் செய்திருக்கிறார்கள். சிபி இயக்கத்தில் `தலைவர் 173' படத்தை முடித்த பிறகு இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார் ரஜினி. கடந்த வாரம் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு இரண்டு நாட்கள் பிரசாத் ஸ்டியோவில் நடைபெற்றுள்ளது.
அந்த புரோமோ நாளை பகல் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 7.12 மணிக்கு, இன்று பகல் 12.07, நாளை பகல் அதே 12.07 மணி என இதுவரை எல்லா அறிவிப்பும் வெளியான நேரம் ரஜினியின் பிறந்ததேதி (12), கமலின் பிறந்ததேதி (7) ஆகியவற்றை குறிப்பவையாக வந்துள்ளது. இதுவரை வந்திருக்கும் இரு அறிவிப்பு போஸ்டர்களை பார்க்கையில் ஒரு வின்டேஜ் ஸ்டைல் படமாக இது இருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது. அதை குறிக்கும்படி COOL RETRO SWAG வீடியோ புரோமோ நாளை வெளியாகும் என இன்றைய அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. தற்போது ரஜினி நடித்துள்ள `ஜெயிலர் 2' ஜூன் 10 வரும் எனவும், சிபி இயக்கும் `தலைவர் 173', 2027 பொங்கலுக்கும் வெளியாக உள்ளது. இதற்கடுத்த படமாக 2027 இறுதியிலோ, அல்லது 2028லோ இப்படம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.