Rajinikanth, Shah Rukh Khan Jailer 2
கோலிவுட் செய்திகள்

அன்று ரஜினி, இன்று ஷாரூக்... மிஸ்ஸான வாய்ப்பு! | Jailer 2 | Ra One

2011ல் வெளியான இந்திப் படம் `ரா ஒன்'. இப்படத்தில் ஷாரூக்கான் ஒரு ரோபோவாக நடித்திருப்பார். இப்படத்தில் `எந்திரன்' படத்தின் சிட்டி பாத்திரம் கேமியோவில் தோன்றும்.

Johnson

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் கேமியோவாக நடிக்க அழைக்கப்பட்ட நிலையில், தெலுங்கு நடிகர்கள் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் ஆகியோர் மறுத்ததாக தகவல். அதேபோல் ஷாரூக் கானும் ‘கிங்’ படத்துக்கான பிரத்யேக லுக் காரணமாக, ரஜினியிடம் மரியாதையுடன் விளக்கி இந்த வாய்ப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் `ஜெயிலர் 2'. இதில் ரஜினி உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ஜெயிலர் முதல் பாகம் போல இந்த பாகத்திலும் நிறைய சிறப்பு தோற்றங்களில் உச்ச நட்சத்திரங்களை நடிக்க வைத்துள்ளனர். ஆனால் அதில் சில நடிகர்கள் நடிக்க மறுத்துவிட்டனர். உதாரணமாக தெலுங்கு சினிமாவிலிருந்து பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க முயன்றனர். அவர் மறுத்த பின் பவன் கல்யாணை நடிக்க கேட்டனர், அவரும் மறுத்துவிட்டார்.

ஜெயிலர் 2 படம் அறிவிப்பு

அதேபோல பாலிவுட் பாட்ஷாவான ஷாரூக்கானை ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைக்க முயன்றனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இப்போது இங்கே ஒரு ஃபிளாஷ்பேக் என்ன என்றால், ஷாரூக்கான் நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கி 2011ல் வெளியான இந்திப் படம் `ரா ஒன்'. இப்படத்தில் ஷாரூக்கான் ஒரு ரோபோவாக நடித்திருப்பார். இப்படத்தில் எந்திரன் படத்தின் சிட்டி பாத்திரம் கேமியோவில் தோன்றும். ஆனால் அப்படத்தில் டாக்சி ஓட்டுநராக நடித்திருந்த சுரேஷ் மேனன், அதில் நடித்திருந்தது ரஜினி அல்ல, ரஜினிக்கு அப்போது உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததால், அவரது டூப் வைத்து அக்காட்சி எடுக்கப்பட்டது என தெரிவித்திருந்தார்.

இப்போது ரஜினியின் `ஜெயிலர் 2' படத்தில் ஷாரூக்கானை கேமியோ ரோலில் நடிக்க அணுகினர். ஷாரூக்கிற்கு இதில் நடிக்க சம்மதம் என்றாலும், தற்போது அவர் `கிங்' படத்துக்கு என பிரத்யேக லுக்கில் இருக்கிறார். அப்படம் வெளியாகும் வரை வேறு படங்களில் நடிக்காமல் இருக்கும் முடிவில் இருப்பதால் `ஜெயிலர் 2' வாய்ப்பை மறுத்துவிட்டார். இது தொடர்பாக ரஜினியிடமும் பேசி புரிய வைத்தாக சொல்லப்படுகிறது. முன்னதாக ஷாருக் படத்தில் ரஜினியால் நடிக்க முடியவில்லை, இப்போது ரஜினி படத்தில் ஷாரூக்கால் நடிக்க முடியவில்லை என்பது குறித்து இணையத்தில் சிலர் எழுதி வருகின்றனர். அதே சமயம் ரஜினி - ஷாரூக் இடையே நல்ல நட்பு உள்ளது என்பதும், ரஜினிகாந்த் நடித்த அனிமேஷன் படமாக கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ஷாரூக்கான் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.