தமிழ் சினிமாவில் மூத்த நடிகைகளில் ஒருவர் ராதிகா. பாரதிராஜா இயக்கிய `கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து பல பாராட்டுகளைப் பெற்றவர். இவர் முக்கிய பாத்திரமாக நடித்து சமீபத்தில் வெளியான `தாய் கிழவி' படமும் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இது சினிமாவில் ராதிகாவின் 49ஆவது ஆண்டு. எனவே இதனை கொண்டாடும் விதமாக அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மரியாதை செய்துள்ளனர். விஷ்ணு இடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின் நடித்து வரும் படம் `ஹாய்'. இப்படத்தில் ராதிகாவும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் நயன்தாரா, கவின் உட்பட படக்குழுவினர் அனைவரும் ராதிகாவுக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி கௌரவித்துள்ளனர்.
இதுகுறித்து நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதில் “ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், HI படப்பிடிப்புத் தளத்தில் இந்த ஆச்சரியமான கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த அன்பான நயன்தாராவுக்கும் நன்றி . இந்த அன்பையும் பாசத்தையும் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன்... எனது சக கலைஞர்களிடமிருந்து நான் பெறும் அன்பில்தான் எனது உண்மையான வெற்றி அளவிடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.