R J Balaji 29
கோலிவுட் செய்திகள்

”லோகேஷ் தயவுசெய்து முடி வெட்டி, ஷேவ் பண்ணுங்க..” வேண்டுகோள் வைத்த RJB | Lokesh Kanagaraj | 29

இங்கு நான் இருக்க முக்கியக் காரணம், லோகேஷ் கனகராஜ். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். எப்போது நான் அழைத்தாலும் எனக்காக லோகேஷ் வந்திருக்கிறார். எனக்கு மட்டுமல்ல, அவரது எல்லா நண்பர்களுக்கும் அப்படித்தான்.

Johnson

`மேயாத மான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். தற்போது விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள '29' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்ம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர்.ஜே,பாலாஜி, "இந்தப் படத்தின் நடிகர் விது, நடிகை ப்ரீத்தி அஸ்ராணிக்கு வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு புரமோஷன் பண்ணுவதாக வீடியோ போட்டு என்னுடைய `கருப்பு' படத்திற்கு புரமோஷன் செய்தார் லோகேஷ் கனகராஜ். `ஆர்ஜே பாலாஜி ’கருப்பு’க்கு கமெண்ட்ரி செய்வார், நீங்க என்ன பண்ணுவீங்க?' என பேசி இருந்தார். அது, எனக்கு மிகவும் உதவியது. இங்கு நான் இருக்க முக்கியக் காரணம் லோகேஷ் கனகராஜ். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். எப்போது நான் அழைத்தாலும் எனக்காக லோகேஷ் வந்திருக்கிறார். எனக்கு மட்டுமல்ல, அவரது எல்லா நண்பர்களுக்கும் அப்படித்தான். இந்தப் படம் அவரது நண்பர் ரத்னவுக்காகச் செய்திருக்கிறார். ஒரு நண்பருக்காக படம் செய்கிறேன் என வாயில் சொல்லிவிட்டுப் போகலாம். நிஜத்தில் செய்வது பெரிய விஷயம்.

ரத்னா நீங்கள் மேடையில் பேசுவதை நான் நிறைய பார்த்திருக்கிறேன். ஒருவர் ஓர் இடத்தில் பேசுவதோ, அவர் போடும் ட்வீட்டோ அவர்களைத் தீர்மானிக்காது. இப்போது நாம் எல்லோரும் கடினமானவர்களாக மாறிவிட்டோம், ஒரே விஷயத்தைவைத்து, பிறரை எடைபோடுகிறோம். அது அவர்கள் கிடையாது. எல்லோரும் உணர்ச்சி மிகுதியில், அந்த நேரத்து மனநிலையில் ஏதோ ஒரு விஷயம் பேசுகிறோம். அது அந்த தருணம்தானே தவிர, அதுவே அவர்கள் கிடையாது. யார் ரத்னா என்றால் ’மேயாத மான்’தான் ரத்னா, ’29’தான் ரத்னா. இப்படத்தின் மூலம் உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கட்டும் ரத்னா.

லோகேஷ் கனகராஜுக்கு தமிழ்நாட்டு மக்கள் சம்பந்தமாக ஒரு வேண்டுகோள். தயவுசெய்து முடிவெட்டி ஷேவ் செய்யுங்கள். அருண் மாதேஸ்வரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என கேக் எல்லாம் வெட்டினீர்கள். பேட்ச் ஒர்க் எல்லாம் நீங்கள் இல்லாமலே எடுத்துக் கொள்ளட்டும், அவர்தான் சினிமா ஜீனியஸ் ஆச்சே. நல்ல கலையாக இருப்பார் லோகேஷ். இப்போது அவர் முகத்தையே தேட வேண்டி இருக்கிறது. இன்னொரு விஷயமும் நான் இங்கு சொல்ல வேண்டும். ஏனென்றால், இதைக் கண்டிப்பாக லோகேஷ் சொல்ல மாட்டார்.

R J Balaji

லோகேஷ் கனகராஜ் ஓட்டு போடவில்லையா என பலரும் சமூக வலைதளங்களில் கேட்டனர். நான் ஒட்டு போட்டுவிட்டு மும்பை கிளம்பினேன். அவர் சென்னையிலிருந்து ஓட்டு போட கோவை கிளம்பினார். விமான நிலையத்தில் நாங்கள் பேசி நலம் விசாரித்துக் கொண்டோம். பேசி முடித்து நான் விமானம் ஏறிவிட்டேன், ஆனால் அவரது விமானத்தைத் தவறவிட்டுவிட்டார். அதனால்தான் அவரால் ஓட்டு போட முடியவில்லை" என்றார்.