Prakash Raj Bollywood Cinema
கோலிவுட் செய்திகள்

"இந்தி சினிமா அதன் வேர்களை இழந்து, பிளாஸ்டிக் போல இருக்கிறது" - பிரகாஷ்ராஜ் | Bollywood

நாம் (தெற்கத்திய) சொல்ல இன்னும் கதைகள் உள்ளன, தமிழின் புதிய இளம் இயக்குநர்கள் தலித் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். அது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.

Johnson

பிரகாஷ்ராஜ், கேரள இலக்கிய திருவிழாவில், தற்போதைய இந்தி சினிமா அதன் வேர்களை இழந்து, பிளாஸ்டிக் போல மாறிவிட்டதாக கருத்து தெரிவித்தார். மலையாளம் மற்றும் தமிழ் சினிமா வலுவான படங்களை உருவாக்கி வருவதாகவும், தெற்கத்திய கதைகள் இன்னும் சொல்லப்பட வேண்டியதாகவும் அவர் கூறினார்.

2016 முதல் வருடா வருடம் கேரள இலக்கிய திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டாக இந்நிகழ்வு ஜனவரி 22 முதல் 25 வரை கோழிக்கோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை பாவனா, இயக்குநர் பா இரஞ்சித் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் ஒருபகுதியாக The Artist I Became என்ற உரையாடல் நிகழ்வு நடிகர் பிரகாஷ்ராஜ் உடன் நடைபெற்றது. அதில் பேசிய பிரகாஷ்ராஜ் தற்போதைய இந்தி சினிமா எப்படி மாறி இருக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். அதில் "தற்போதைய சூழலில், மலையாளம் மற்றும் தமிழ் சினிமா மிகவும் வலுவான படங்களைத் தயாரிப்பதாக நான் உணர்கிறேன். மறுபுறம், இந்தி சினிமா அதன் வேர்களை இழந்துவிட்டது. அதில் எல்லாம் அழகாகவும், அற்புதமாகவும் பிளாஸ்டிக் தன்மையுடனும் இருக்கிறது, அப்படியே Madame Tussauds Museumல் பார்ப்பது போல. நாம் (தெற்கத்திய) சொல்ல இன்னும் கதைகள் உள்ளன, தமிழின் புதிய இளம் இயக்குநர்கள் தலித் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். அது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.

மல்டிபிளக்ஸ் வந்த பிறகு, பாம்பே திரைப்படத் துறை மல்டிபிளக்ஸ்களுக்காக மட்டுமே படங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. மிகவும் அழகான படங்கள் போன்றவற்றை தவிர்த்தன. ஏனென்றால் அவை நன்றாக ஓடின. அவை Page 3 கலாச்சாரத்திற்குள் சென்றன, அதன் காரணமாக ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற கிராமப்புறத்துடனான தொடர்பை இழந்தன. இன்று, எல்லாவற்றிலும் பணம் மற்றும் தோற்றம் முதன்மையாக இருக்கிறது. Reels, Page 3 கவரேஜ் மற்றும் அதீத சுய விளம்பரம் போன்ற செயல்பாடுகளினூடாக, இந்தத் துறை பார்வையாளர்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன்" என்றார்.