Prakash Raj , Suvarnalatha Rai web
கோலிவுட் செய்திகள்

"என் தாயின் கடவுள் நம்பிக்கையை தடுக்க நான் யார்?" - மறைந்த தாய் குறித்து பிரகாஷ் ராஜ் | Prakash Raj

கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதைப் பற்றி சிந்திக்க தனக்கு நேரமில்லை. கடவுள் இருக்கிறார் என சொல்வதற்கு வெறும் நம்பிக்கைபோதும். ஆனால் இல்லை என சொல்வதற்கு நிறைய அறிவு தேவை.

Johnson

இந்திய நடிகர் பிரகாஷ் ராஜின் தாய் சுவர்ணலதா 89 வயதில் காலமானார். கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகரான அவர், தாயின் விருப்பத்தின்படி கிறிஸ்தவ மரபில் இறுதிச்சடங்கு நடத்தியது குறித்து எக்ஸ் தளத்தில் கேள்வி எழுந்தது. அதற்கு, தாயின் நம்பிக்கையை மறுப்பது மரியாதைக்கேடாகும், ஒருவரின் நம்பிக்கையை மதிப்பதே மனிதநேயமென அவர் பதிலளித்தார்.

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபத்தில், பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா (89), கடந்த மார்ச் 29ம் தேதி வயது முதிர்வு தொடர்பான நோய்களால் காலமானார். இவரது இறுதிச்சடங்கு மார்ச் 31ம் தேதி பெங்களூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தொடர்பான ஒரு சர்ச்சை கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

Prakash Raj

பிரகாஷ் ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதைப் பற்றி சிந்திக்க தனக்கு நேரமில்லை. கடவுள் இருக்கிறார் என சொல்வதற்கு வெறும் நம்பிக்கைபோதும். ஆனால் இல்லை என சொல்வதற்கு நிறைய அறிவு தேவை. நான் இந்த உலகத்தில் வாழ்கிறேன். சக மனிதர்களையே நம்புகிறேன்" என தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்து இன்று ஒரு எக்ஸ் தல பயனர் ஒருவர்  "பிரகாஷ் ராஜ் தன்னை ஒரு நாத்திகர் என்றும், கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் கூறிக்கொள்கிறார், ஆனாலும் தனது தாயின் இறுதிச் சடங்குகளை கிறிஸ்தவ மரபுகளின்படி செய்கிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த பிரகாஷ் ராஜ் "ஆம், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் என் தாய்க்கு அவரின் கடவுள் நம்பிக்கை உண்டு. அவரது நம்பிக்கையை மறுக்கவோ, அவரது நம்பிக்கையின்படி உடலை அடக்கம் செய்ய மறுக்கவோ நான் யார்?. இதுதானே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அடிப்படையான மரியாதை. வெறுப்பை தூண்டுபவர்கள் இதை புரிந்து கொள்வார்களா?" என பதிவிட்டிருந்தார். இந்த பதில் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.