தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்தவர், தொடர்ந்து `லவ் டுடே', `டிராகன்' படங்கள் மூலம் ஹீரோவாகவும் பெரிய வெற்றி பெற்றார். இவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகி இருக்கும் இரு படங்கள் `லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' மற்றும் `டூட்'.
இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள `லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா பின்பு முக்கிய வேடத்தில் சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். 2040ல் நடப்பது போன்ற கதைக்களத்தில் நிறைய கிராஃபிக்ஸ் சேர்க்கப்பட்டு தயாராகி உள்ளது. பிரதீப்பின் இன்னொரு படம் `ட்யூட்'. சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்தீஸ்வரன் இயக்கிய இப்படத்தில் மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்பு `லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 வெளியாகும் எனவும், `ட்யூட்' தீபாவளி வெளியீடாக வரும் எனவும் அறிவித்தது, அப்படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள். செப்டம்பரில் ஒரு படம், அக்டோபரில் ஒரு படம் என அடுத்தடுத்த மாதங்கள் ஒரே ஹீரோவின் படம் எப்படி வரும்? என்ற கேள்வி எழுந்தது. இதில் இன்னும் திருப்பம் ஏற்பட்டது போல், `லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் சில வேலைகள் பாக்கி இருக்க, இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என முடிவு செய்தனர். அதன்படி `ட்யூட்' மற்றும் `லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என இரு படங்களும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர்.
ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் எப்படி வெளியாகும்? அப்படி வெளியானால் பல சிக்கல்கள் வருமே என்ற குழப்பங்கள் எழுந்தது. இது சார்ந்து இரு படங்களின் தயாரிப்பு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அவற்றில் பெரிய பலன் ஏற்படவில்லை என்றாலும், ஒருவழியாக இதில் ஒரு முடிவெடுக்கப்பட்டு, முன்பே அறிவிக்கப்பட்டது போல `ட்யூட்' தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதியும், விக்னேஷ் சிவனின் `லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' டிசம்பர் 18ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் தள்ளிப்போவது பற்றி செவன் ஸ்க்ரீன் நிறுவனம் "இரண்டு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால், அது பேராபத்தில் தான் முடியும். எனவே அதை தவிர்க்கும் பொருட்டு, மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரன் அறிமுகமாகும் 'டூட்' படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டரா அமைய வாழ்த்துகிறோம். எங்கள் படத்துக்கு வழிவிட்டு வேறொரு தேதியில் 'டூட்' படத்தை ரிலீஸ் செய்யச்சொல்லி மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது பலனளிக்கவில்லை. மேலும், தற்போது திரைப்படத்துறை மற்றும் திரையரங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, இரண்டு படங்களின் வசூலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். எனவே அன்பின் அடையாளமாக, எங்கள் திரைப்படத்தை 2025 டிசம்பர் 18 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம். எங்கள் டீசருக்கு கொடுத்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதே ஆர்வத்துடன் படம் வெளியாகும் வரை காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். வரும் வாரங்களில் படம் குறித்த பல புதிய அப்டேட்கள், பாடல்கள் உங்களைத் தேடி வரவிருக்கின்றன. மனமார்ந்த நன்றி." என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எது எப்படியோ Dude - LIK சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்தது. அதே சமயம் தீபாவளிக்கு மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் `பைசன்', ஹரீஷ் கல்யாணின் `டீசல்' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.