`கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து `லவ் டுடே', `டிராகன்', `ட்யூட்' படங்கள் மூலம் ஹீரோவாகவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். இதற்கடுத்து அவர் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள `LIK'.
முதன்முதலில் இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் தீபாவளி வெளியீடாக பிரதீப் நடித்த `ட்யூட்' படம் அக்டோபர் 17 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் எப்படி ஒரே ஹீரோவின் படம் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே `LIK' படமும் அக்டோபர் 17 ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் ஒருவழியாக பேச்சுவார்த்தை நடத்தி `LIK' படம் பின்வாங்க, `ட்யூட்' மட்டும் வெளியானது. அப்போது `LIK' படம் டிசம்பர் 18 வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பின்னர், காதலர் தினத்தன்று இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதுவரை ரிலீஸ் பற்றிய எந்த தகவலும் இல்லை.
இந்த சூழலில் இப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த தேதியிலும் படம் வெளியாகாது எனச் சொல்கிறது கோலிவுட் வட்டாரங்கள். சில பணப் பிரச்சனை மற்றும் ஓவன் சீஸ் சென்சார் சிக்கல்கள் இருப்பது காரணம் என சொல்லப்படுகிறது. தற்போது இந்த சிக்கல் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது எனவும், ஏப்ரல் 10ஆம் தேதி படம் வெளியாகும் என புது அப்டேட் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதில் இன்னொரு விஷயம் என்ன என்றால், இப்படம் ஏப்ரல் 3 வெளியாகிறது என்பதால், ஏப்ரல் 10ஆம் தேதிக்கு தள்ளிப் போனது லெஜெண்ட் சரவணன் நடித்த `லீடர்' மற்றும் பரத் நடித்த `காளிதாஸ் 2'. இப்போது LIK தள்ளிப் போகிறது என்ற சூழல் வந்ததால், மீண்டும் தங்கள் அறிவித்த தேதியான ஏப்ரல் 3க்கே திரும்பியுள்ளது `லீடர்' மற்றும் `காளிதாஸ் 2'.