பூர்ணிமா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் `யெல்லோ'. இப்படம் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய பூர்ணிமா "ஒரு படம் செய்தால் நாம் என்ன எதிர்பார்ப்போம்? அடுத்தடுத்த வாய்ப்புகள், பணம், புகழ், பிரபல்யம் இதெல்லாம் தானே. கண்டிப்பாக இதெல்லாம் தேவையானவை தான். இதெல்லாம் எதிர்பார்த்தே நாங்களும் இந்தப் படத்தை செய்தோம். ஆனால் எங்களுக்கு இதெல்லாம் இரண்டாம்பட்சம் தான். முதன்மையாக கற்றலும் அனுபவமும் தான் தேவைப்பட்டது. அந்த வகையில் இந்தப் படத்தில் எங்களுக்கு பெரிய அனுபவம் கிடைத்தது. அதன் மூலம் படத்தின் பாதி வெற்றியை பார்த்துவிட்டோம். மீதமுள்ள அந்த விஷயங்கள் கிடைக்க உங்களுடைய ஆதரவு தேவை.
இந்த உலகத்தில் எதோ ஓர் மூலையில் வாய்ப்பு தேடி சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு இந்தப் படம் ஊக்கம் தரும். தயாரிப்பாளருக்கு நல்ல நடிகர், நடிகருக்கு நல்ல இயக்குநர், இயக்குநருக்கு பெரிய தயாரிப்பாளர் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். எங்கள் எல்லோருக்கும் அது போல ஆசை இருந்தது. நாங்கள் எல்லோரும் வாய்ப்பு தேடிக் கொண்டுதான் இருந்தோம். அது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் வாய்ப்பை உருவாக்கி நாங்கள் செய்திருக்கும் படம் இது. அதற்காகவே இந்தப் படத்திற்கு வெளிச்சம் கிடைக்க வேண்டும்.
இந்தக் குழு மொத்தமும் ஒரு சின்ன வீடியோவில் பணியாற்ற சில வருடங்கள் முன்பு ஒன்றிணைந்தோம். இப்போது அதே குழு ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறோம். இதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. இது ஒரு இன்டிபென்டட் படம் தான். கொரில்லா ஸ்டைலில் தான் படமாக்கினோம். சில இடங்களில் அடிப்படை தேவைகள் கூட இருக்காது. அதற்கு காரணம் நாங்கள் தேர்வு செய்த கதைக்களம். அதையும் மீறி தயாரிப்பாளர் பிரசாத் எங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார்" என்றார்.