விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர், அஷ்வின்குமார், பிரிகிடா, பவானி ஸ்ரீ, தம்பிராமையா, எம்.எஸ் பாஸ்கர், ஆதித்யா, ரக்ஷன் எனப் பலரும் நடித்து வெளியான படம் `ஹாட்ஸ்பாட் 2 மச்'. இப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதை முன்னிட்டு படக்குழு நன்றி விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். "ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது. ’அதற்குள் ஏன் சக்சஸ் மீட்’ என கேட்டார்கள். ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பெரும் வரவேற்பும் இருந்தது. ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ.. அதைவிட இரண்டு மடங்கு இப்படம் வெளியான நான்கு நாளில் வசூலித்திருக்கிறது. அந்த வகையில், இந்தப் படம் எங்களுக்கு வெற்றிதான். அதனால்தான் இந்தப் படத்திற்கு ஆறாவது நாளில் நம்பிக்கையுடன் வெற்றி விழாவை ஒருங்கிணைத்திருக்கிறோம்.
இந்தப் படத்தின் முதல் கதையில் வரும் ஃபேன் வார் யாரோ இரு நடிகர்களை குறிப்பிட்டுச் சொல்கிறோம் என சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அது அப்படியல்ல, பொதுவாகவே நாயக வழிபாடு பற்றித்தான் பேசியிருக்கிறோம். அதனை இரண்டு நட்சத்திரங்களின் வழியாகச் சொன்னால் நன்றாக இருக்கும். எளிதாக புரியும் என்பதாகத்தான் விவரித்து இருக்கிறோம். டோனி ரசிகர்கள் கோலியை வசைபாடுவதும், கோலியின் ரசிகர்கள் தோனியை வசைபாடுவதும் இணையத்தில் தொடர்கிறது. ஓர் இசை அமைப்பாளரின் ரசிகர்கள் மற்றொரு இசையமைப்பாளரை விமர்சிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்துத்தான் நாங்கள் ரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாகப் பேசி இருக்கிறோமே தவிர, குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களைப் பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை.
அதே சமயத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் இடம்பிடித்திருக்கிறது. ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும் ஒரு படம் பிடிக்கவில்லை என்பதும் படத்தைப் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களின் தனிப்பட்ட கருத்து. இதை நாங்கள் மதிக்கிறோம். வரவேற்கிறோம். ஆனால் பெண்ணியவாதிகள் சிலர் தங்களின் கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல், இணையத்தில் வெளியான துண்டு காணொளிகளை மட்டும் பார்த்துவிட்டு, சில சூடோ ஃபெமினிஸ்ட்டுகள், அதாவது அரைவேக்காடான ஃபெமினிஸ்ட்டுகள் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவறு. அவர்கள் இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முழுமையாக பார்த்துவிட்டு, பிடித்தால் ஓகே, இல்லை என்றாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதை எல்லாம் ஏன் சொல்கிறாய் எனக் கேட்காதீர்கள். எப்படி என்னைக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இருக்கிறதோ. அதேபோல் நான் நினைப்பதை எடுக்க ஒரு படைப்பாளியாக எனக்கும் முழு உரிமை உள்ளது.
நான் என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டு எனக்குத் தெரிந்த வகையில், நிறைய மக்களுடன் விவாதித்து அதனை எப்படி குழப்பம் இல்லாமல் தெளிவாக மக்களுக்கு வழங்கிட இயலும் என்பதையும், எப்படி சமூகப் பொறுப்புடன் இதனைச் சொல்ல வேண்டும் என்பதையும் மனதில் வைத்துத்தான் இந்தப் படைப்பை உருவாக்கி இருக்கிறேன். ஒரு படைப்பாளனாக ஒரு படைப்பை உருவாக்குவதற்கு எனக்கு முழுச் சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்" என்றார்.