விஜய், அசின், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பேரரசு இயக்கி 2005 தீபாவளிக்கு வெளியான படம் `சிவகாசி'. இப்படம் ஏப்ரல் 24ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸ் காட்சி பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த பேரரசு "2005 தீபாவளிக்கு இந்தப் படம் வெளியான போது தியேட்டர்களுக்கு சென்று கொண்டாட்டத்தை பார்த்தேன். இத்தனை வருடம் கழித்து இந்த ரீ-ரிலீஸிலும் அதே போன்ற ஆராவாரம் இருக்கிறது. படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை கைதட்டல்கள். அதிலும் கோடம்பாக்கம் ஏரியா பாடலின் வரிகள் இப்போதைய அரசியல் சூழலுக்கு ஒத்துபோவது மாதிரி ஆகிவிட்டது. `ஏழைங்க பாழைங்க மனசு வெச்சா நாளைக்கு நீங்களும் CMமு தான்' என்ற வரிகள் வரும் போது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
அன்று இந்தப் படம் வெளியான போது ஆண்கள் கூட்டம் தான் அதிகம் இருந்தது. இப்போது பெண்கள் கூட்டம் தான் அதிகம் உள்ளது. எல்லா பாடலுக்கும் அவர்கள் எழுந்து ஆடுகிறார்கள். சிவகாசியில் அம்மா, தங்கை செண்டிமெண்ட் இருக்கிறதே, இப்போது அதெல்லாம் சரிவருமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் சென்டிமென்டுக்கு எப்போதும் உயிர் இருக்கிறது என நிரூபணமாகிவிட்டது.
இந்த நேரத்தில் நான் விஜய் சாருக்கு ரொம்பவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்ததே அவர்தான். திருப்பாச்சி என்பது ஒரு வாய்ப்பு அல்ல, அது எனக்கு கிடைத்த வாழ்க்கை. என்னை பொறுத்தவரை விஜய் சார் நினைத்தபடி ஒரு பதவி அடைந்துவிட்டால் சரி. இல்லை என்றால் அவர் திரும்ப நடிக்க வரவேண்டும். இந்தப் படத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் அவரது நடிப்பு தான். அதையும் அவர் தொடர வேண்டும் என்பதுதான் ஆசை. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சிவகாசியை விட பல மடங்கு மாஸ் படம் செய்ய முடியும்." என்றார்.