சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வெளியான படம் `பராசக்தி'. சிவாவின் 25வது படமான இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா எனப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜனவரி 10ம் தேதி வெளியான இப்படம் வெளியாகி 7 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் 27 கோடி (Gross) என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படத்தின் தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ். இந்திய அளவில் முதல் நாள் வசூல் 12.5 கோடி (Net) என சொல்லப்படுகிறது. இதற்கு முன் வந்த சிவகார்த்திகேயனின் படமான `மதராஸி' பட முதல் நாள் இந்திய வசூல் 13.65 கோடி (Net), `அமரன்' பட முதல் நாள் இந்திய வசூல் 24.7 கோடி (Net). எனவே முந்தைய சிவாவின் படங்களை பொறுத்தவரை இது குறைவான வசூலே.
இப்போது படம் வெளியாகி 7 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் வசூல் இந்திய அளவில் 41.25 கோடி (Net) என சொல்லப்படுகிறது. இதுவே `மதராஸி' படத்தின் முதல் வார இந்திய வசூல் 49 கோடி, மற்றும் `அமரன்' படத்தின் முதல் வார இந்திய வசூல் 132.2 கோடி என்றாக இருக்கிறது. எனவே வசூலாக சிவாவின் முந்தைய படங்களை ஒப்பிட்டால் `பராசக்தி' வசூல் குறைவே. ஆனால் `அமரன்' படத்துக்கு கிடைத்த வசூல் எல்லாம் எப்போதாவது ஒருமுறை நடக்கும் அதிசயம் தான். அதே போல `மதராஸி' படத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் நல்ல ரிலீஸ் அமைந்தது. ஆனால் பராசக்தி பொறுத்தவரை தமிழ்நாடு மட்டுமே பிரதானமான ரிலீஸ். ஆந்திரா, தெலுங்கானா பொறுத்தவரை அவர்களின் பெரிய ஹீரோ படங்களே 5 படங்கள் வெளியானது. எனவே அது பெரிய பின்னடைவாக அமைந்தது. இப்போதைக்கு `பராசக்தி' வசூல் நிலவரம் இது தான். இனிமேல் இந்த நிலை எப்படி மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.