Mari Selvaraj, Neeraj Ghaywan Homebound, Bison
கோலிவுட் செய்திகள்

`Homebound' - `பைசன்'... பாராட்டுகளை பகிர்ந்து கொண்ட மாரியும், நீரஜும்! | Bison | Mari Selvaraj

வாய்ப்புகள் முற்றிலும் எதிராக இருந்தாலும் கூட, மகனைத் தொடர்ந்து விளையாட சொன்ன தந்தையின் தொலைபேசி அழைப்பு என்னைத் ஈர்த்தது. நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன், அது எனக்கு அளித்த தைரியத்தை பெற்று அமைதியாக அமர்ந்தேன்.

Johnson

தமிழ் சினிமாவில் சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து தொடர்ந்து தன் படங்களில் பேசிவரும் இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். அதே போல பாலிவுட்டில் `Masaan', `Homebound' படங்களின் மூலம் சமூகத்தில் நிலவும் சிக்கல்களை பேசியவர் நீரஜ் கெய்வான். மாரி செல்வராஜ் இயக்கிய `பைசன்' மற்றும் நீரஜ் கெய்வான் இயக்கிய `Homebound' ஆகிய படங்கள் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

சமீபத்தில் `Homebound' படத்தை பார்த்த மாரி செல்வராஜ், எக்ஸ் தளத்தில் "நான் Homebound பார்த்தேன், இயக்குநர் நீரஜ், இந்த நாட்டின் தெற்கு எல்லையிலிருந்து, உங்களை அன்புடன் அரவணைக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த நீரஜ் "நன்றி, மாரி! உங்கள் அரவணைப்பை பணிவுடனும் சகோதரத்துவத்துடன் உங்களுக்கும் திருப்பித் தருகிறேன். உலகம் என்னை பார்க்க மறுக்கும் போது, நமது குரல்களின் மூலம் பகிரப்பட்ட சக்தியால் நான் உயர்ந்து நிற்கிறேன்!" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கிய `பைசன்' படத்தை பார்த்த நீரஜ் கெய்வான் இன்று எக்ஸ் தளத்தில் "மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய #BisonKaalamadan திரைப்படத்தின் மூர்க்கத்தனத்தைக் கண்டு நான் பிரமித்துப் போனேன்! Sports biopicல் சிறப்பான வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சக்திவாய்ந்த நடிப்புகளுடன் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது. தந்தை-மகனாக துருவ் விக்ரம் மற்றும் பசுபதி ஆகியோர் சிறப்பாக இருந்தனர்.

வாய்ப்புகள் முற்றிலும் எதிராக இருந்தாலும் கூட, மகனைத் தொடர்ந்து விளையாட சொன்ன தந்தையின் தொலைபேசி அழைப்பு என்னைத் ஈர்த்தது. நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன், அது எனக்கு அளித்த தைரியத்தை பெற்று அமைதியாக அமர்ந்தேன். இந்தியாவுக்காக தனது மகனை கபடி விளையாட அனுமதிக்க கோரி தந்தை போலீசாருடன் போராடியபோதும் அதே உணர்வு ஏற்பட்டது. நாம் உயிர்வாழ முடியுமா என்று உறுதியாகத் தெரியாத தருணங்களில் நாம் நேசிக்கும் மக்கள் நம்மை நகர்த்தி கொண்டு செல்கிறார்கள். மாரி, வணங்குகிறேன் சகோதரரே!" எனப் பதிவிட்டுள்ளார்.