தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான `மனசினக்கரே' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நயன், ஹரி இயக்கத்தில் உருவான `ஐயா' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் நடித்துவிட்டார்.
ரஜினிகாந்த், விஜய், அஜித், மோகன்லால், மம்மூட்டி, உபேந்திரா, ஷாரூக்கான் எனப் பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நயன்தாரா. இந்த நிலையில் கேமரா முன்பான தன் பயணம் தொடங்கி 22 ஆண்டுகளானதை குறிப்பிட்டு நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டிருக்கிறார். "22 ஆண்டுகளுக்கு முன் கேமராவுக்கு முன் நான் நின்ற போது, சினிமாதான் என் வாழ்க்கையாகும் என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு மௌனமும்... என்னை செதுக்கியது, என்னை குணப்படுத்தியது, இன்றைய என்னை உருவாக்கியது. இதற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று அந்தக் குறிப்பில் எழுதியிருக்கிறார் நயன்தாரா.